ஒரே ஷெட்யூலில் 54 நாட்களில் எடுக்கப்பட அக்யூஸ்ட்!

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் படிப்பிடிப்பு ஜனவரி 2 அன்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் தொடங்கியது. சிறப்பான திட்டமிடலின் காரணமாக ஒரே ஷெட்யூலில் 54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. படப்பிடிப்பு மகளிர் தினத்தன்று நிறைவுற்ற நிலையில் குழுவிலுள்ள பெண்களுக்கும் மற்றும் அனைத்து மகளிருக்கும் ‘அக்யூஸ்ட்’ குழுவினர் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

சேலத்தை பின்னணியாக கொண்ட கதை என்பதால் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வாசலில் ‘அக்யூஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவுற்றது. உதயா, அஜ்மல், யோகிபாபு தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு தங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். பிரபல இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய வேடமொன்றில் நடித்துள்ளார். தான் இயக்காத படமொன்றில் பிரபு சாலமன் நடிப்பது இதுவே முதல் முறை.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவாவும் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்றுள்ளார். பவன் எதிர்மறை வேடத்தில் நடிக்க, கன்னட திரையுலகின் முன்னணி வில்லன் நடிகர் பிரபாகர் ‘அக்யூஸ்ட்’ படத்தில் மிரட்டியுள்ளார். 90களில் மிகவும் புகழ்பெற்ற ஓ மரியா புகழ் டானி நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடித்துள்ளார். சுபத்ரா, தீபா பாஸ்கர், ஶ்ரீதர், பன்னீர்செல்வம், யூடியூப் புகழ் திவாகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மும்பை நடிகை சயந்திகா முக்கிய வேடத்தை ஏற்று தமிழில் அறிமுகம் ஆகிறார்.

நரேன் பாலகுமார் இசையில் மூன்று முத்தான பாடல்கள் இப்படத்தில் இடம்பெறும் நிலையில், முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். பிரபல ஆக்ஷன் காட்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா கைவண்ணத்தில் மூன்று பரபரப்பு சண்டைக் காட்சிகள் ‘அக்யூஸ்ட்’ படத்தில் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும்.

இதில் ஒரு சண்டைக்காட்சிக்காக ‘அக்யூஸ்ட்’ தயாரிப்பாளர்கள் சொந்தமாக பேருந்து ஒன்றை வாங்கினர். சுமார் 45 ஃபைட்டர்கள், 60 துணைக் கலைஞர்க‌ளுடன் உதயாவும் அஜ்மலும் பங்கேற்ற ஸ்டண்ட் காட்சி சென்னைக்கு அருகே படமாக்கப்பட்டது. மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பு அனுமதி பெற்று ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் படமாக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைந்து நடைபெற்று கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் ‘அக்யூஸ்ட்’ வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடிக்கிறார். அவருடன் முதல் முறையாக அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *