சீயான் விக்ரம், பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில மிக முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த படத்தின் சாதக, பாதகங்கள், வாய்ப்புகள், ஆபத்துகள் என்ன என்பதை பற்றி இந்த SWOT Analysis வீடியோவில் அலசலாம்.
STRENGTH’s:
1) சீயான் விக்ரம். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை உயிரைக் கொடுத்து நடித்து மிகவும் நம்பகத்தன்மையான ஒரு கதாபாத்திரமாக மாற்றுபவர் தான் விக்ரம். விக்ரமை மறந்து அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்போம். கே ஜி எஃப்பை மையமாகக் கொண்ட இந்த படத்தில் தங்கலான், காடையன் என இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடித்து மிரட்டியுள்ளார். எந்த ஒரு நடிகருமே செய்யத் துணியாத விஷயத்தை, அதாவது கோவணம் கட்டி நடித்திருக்கிறார். அவரது அபார நடிப்பே இந்த படத்திற்கு முதல் அடையாளம். அவரை பார்க்கவே சீயான் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் வருவார்கள்.
2) பா.ரஞ்சித். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே அசால்ட்டாக கையாண்ட ரஞ்சித், இந்த தங்கலானை அவரது கனவுப்படமாக படைத்திருக்கிறார். முந்தைய எந்த ஒரு படத்திலும் அவர் படாத கஷ்டத்தை, காடு மலை என கடந்து உருவாக்கத்தில் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். முற்றிலும் புதிய, நாம் இதுவதை பார்த்திராத ஒரு உலகத்தை படைத்திருக்கிறார். ஒரு மறைக்கப்பட்ட வரலாற்றை திரையில் வடிக்க முயன்றிருக்கிறார். அதுவே இந்த படத்தை பார்க்க ரசிகர்களை தூண்டும் முக்கிய காரணி.
3) மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம். பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார் உட்பட பல நட்சத்திரங்கள் என்று சொல்வதை விட திறமையான நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான ஆவலை மேலும் தூண்டியிருக்கிறது. சார்பட்டாவில் எப்படி ரங்கன் வாத்துயார், தணிகா, மாரி என காலத்துக்கும் நிற்கும் பாத்திரங்களை படைத்தரோ அப்படி இதில் நடித்த நடிகர்களையே மறக்கும் அளவுக்கு தனித்துவமான கதாபாத்திரமாக படைத்திருப்பார் ரஞ்சித் என்பதில் ஐயமில்லை.
4) மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 100 கோடி இருக்கும்னு சொல்றாங்க. கே.ஜி.எஃப் பகுதிகளிலேயே தங்கியிருந்து படத்தை ரியல் லொகேஷன்களில் உருவாக்கியிருப்பது கூடுதல் சிறப்பு. கே.ஜி.எஃப் என்ற மாஸ் படத்தை பார்த்ததை மறக்கும் அளவுக்கு கேஜிஎஃப்பை அதன் உண்மைத்தன்மையுடன் காட்டி இருக்கிறார் ரஞ்சித்.
5) டீசர், ட்ரைலரில் பார்த்த வரையில் விஷூவல்ஸ் வேற லெவல்ல இருக்கு. லைட்டிங், கேமரா கோணம் என தெறிக்க விட்டிருக்கிறார்கள். பெரிய திரையில் இந்த காட்சிகளை பார்ப்பது ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
6) இசை அசுரன் ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு மிக முக்கிய பலம். ரஞ்சித் படத்துக்கு முதல்முறையாக ஜிவி இசை. ஆனாலும் தெறிக்க விட்டிருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பிறகு இப்படி ஒரு படம் அமைந்தது ஜிவிக்கு கிடைத்த தீனி. அதை செவ்வனே செய்திருக்கிறார். இதுவரை வெளிவந்த மினுக்கி, தங்கலானே, அறுவடை போன்ற பாடல்களும் செம்ம கமெர்சியல் ஹிட். தியேட்டரில் கொண்டாட்டத்தை உருவாக்கும் பாடல்கள் அவை.
7) படத்தின் ஆக்ஷன் காட்சிகள். போர் காட்சிகள், சண்டைக் காட்சிகள் எல்லாமே மிகவும் யதார்த்தமாக ரொம்பவே மெனக்கெட்டு உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு உலகத்தரமான விஷூவலை திரையில் காணலாம்.
8) படத்தின் நீளம். 2 மணி நேரம் 31 நிமிடங்கள். கமெர்சியல் படத்துக்கு கச்சிதமான ரன் டைம். படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்களுக்கு நிறைவான அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி.
WEAKNESS:
1) படம் முழுக்க பீரியடில் நடக்கும் கதை. ட்ரைபல் இனக்குழுக்கள், அவர்களை சுற்றி நடக்கும் கதைகளை ரசிக்கும் விதத்தில் கொடுப்பது மிகப்பெரிய சவால். ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகம் போல அந்த பயணத்தை கொடுப்பது ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும். அரவான் படம் போன்று கையாண்டால் ரசிகர்களை கட்டிப்போடுவது கஷ்டம். ரஞ்சித் பக்கா கமெர்சியல் படமாக கொடுத்திருப்பார் என்று நம்பலாம்.
2) இயல்பாகவே ரஞ்சித் படங்களுக்கு ஒரு சாரார் வருவதில்லை என்ற கருத்து உண்டு. ரஜினி நடித்த காலா படத்துக்கே இது நடந்தது என்பது அப்போது பேசப்பட்டது. அதை எல்லாம் மறக்கடித்து இந்த படத்திற்கு அவர்களை வர வைக்க வேண்டிய கட்டாயம் ரஞ்சித்துக்கு இருக்கிறது.
3) ரஞ்சித் மேஜிகல் ரியலிஸம் என்ற விஷயத்தை கையாண்டிருக்கிறார். அது திரைக்கதையில் எந்த அளவுக்கு சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்தே வெற்றி அமையும்.
OPPORTUNITIES:
1) ஸ்டுடியோகிரீன் தயாரிப்பான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தால் அது அந்த நிறுவனத்தின் அடுத்த படைப்பான, சில வாரங்கள் கழித்து வெளியாகும் கங்குவா படத்தை இன்னும் மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்க்கும்.
2) சீயான் விக்ரம் நடித்த ஐ படம் 230 கோடி, PS 1 430 கோடி, PS 2 350 கோடிகளை வசூல் செய்திருக்கிறது. அவை எல்லாம் ஷங்கர், மணிரத்னம் படம் என்ற கணக்கில் வைத்து விட்டார்கள். அந்த வகையில் தங்கலான் வெற்றி நிச்சயம் விக்ரம் கேரியரில் நம்பர் 1 வசூல் சாதனை படமாக அமைய வாய்ப்பு உண்டு. படத்துக்கு நல்ல வரவேற்பு வந்தாலே நிச்சயம் இது நடக்கும்.
3) இந்த படம் அதிரி புதிரி வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தால் அடுத்து ரிலீஸ் ஆகாமல் நின்று போன பிரமாண்ட படமான துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட சம்பந்தப்பட்டவர்கள் முன்வருவார்கள் என்பது உறுதி.
THREATS:
1) அதே நாளில் தமிழில் டிமாண்டி காலனி 2, ரகு தாத்தா உட்பட இந்திய அளவில் 10 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவற்றுக்கு மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று நம்பர் 1 படமாக அமைந்தால் மட்டுமே தங்கலான் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும். கலவையான அல்லது நெகடிவ் விமர்சனங்கள் வந்தால் அது படத்தை வெகுவாக பாதிக்கும்.
2) ஒரு வேளை ரிசல்ட் நெகட்டிவாக அமைந்தால் அது கங்குவாவையும் பாதிக்கும். ஏனெனில் தயாரிப்பாளர்கள் தங்கலான் அப்படி, இப்படி, ஆஹா, ஒஹோ என சொல்லியிருப்பதால் அதை பூர்த்தி செய்யா விட்டால் கங்குவா மீதான எதிர்பார்ப்பும் குறைய வாய்ப்பு உண்டு. கங்குவா ஓபனிங்கில் தங்கலான் வெற்றியும் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூட சொல்லலாம்.