கல்வெட்டு தான் வரலாறா? மறைக்கப்பட்ட வரலாற்றை எப்படி மீட்பது? – பா.ரஞ்சித்

சீயான் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரி கிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார், இயக்குனர் விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இவ்விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “அட்டகத்தி’ படத்தில் ஞானவேல் ராஜாவுடன் தொடங்கிய இந்தப் பயணம். எனக்கு ஆதரவு கொடுத்து இந்த படத்தினை இயக்குவதற்கான வாய்ப்பளித்து, என் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஞானவேல் ராஜா.‌ அவரை மறக்க கூடாது என்பதற்காக உருவாக்கியது தான் ‘தங்கலான்’ என நான் நினைக்கிறேன். சர்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.‌ அந்தத் தருணத்தில் ஞானவேல் ராஜாவுடன் தான் இணைந்து பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன். அப்போது என்னிடத்தில் ‘அவருக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஏன் அவருடன் இணைந்து இருக்கிறீர்கள்?’ என கேள்வி கேட்டனர். அந்தத் தருணத்தில் என் மனதில் இவருடன் இணைய வேண்டும் என்று தோன்றியது அவ்வளவு தான். அவருடன் இணைந்து நிற்க அவர் செய்த விசயம் சாதாரணமானதல்ல.  தங்கலான் என்ற ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்ற போது அதன் பட்ஜெட் மீது பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் நிறைவடையும் வரை எந்த ஒரு சிறிய தடையை கூட வரவிடாமல் படத்தை நிறைவு செய்தார். நான் நினைத்த ஒரு படத்தை.. எந்தவித சமரசமும் இல்லாமல் எடுப்பதற்கு பெரிய ஆதரவை அவர் வழங்கினார். ஒரு தயாரிப்பாளராக அவர் என் மீது வைத்த நம்பிக்கையை.. ஒரு சகோதரராக அவரின் மீது வைத்த நம்பிக்கையை.. ஒரு வெற்றியை வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த திரைப்படம் நீங்கள் நினைப்பது போல் பிரம்மாண்டமான வெற்றியை வழங்கும் என நம்புகிறேன்.

சினிமா நம் வாழ்க்கை மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த சினிமாவை எப்படி பயன்படுத்த வேண்டும்? அந்த சினிமா தற்போது எப்படி இருக்கிறது?.. நான் கலைக் கல்லூரியில் படிக்கும் போது சினிமாவை சரியாக புரிந்து கொண்டு தான் சினிமாவில் நுழைந்தேன். நான் கலை கல்லூரி சேர்ந்த பிறகு தான் முதன் முதலாக திரைப்பட விழாவினை நடத்தினார்கள். அதன் பிறகு  சர்வதேச திரைப்பட விழாக்களில் பல உலக சினிமாக்களை பார்த்தேன். நான் பார்த்த பல உலக சினிமாக்கள் தான் என்னை உருவாக்கியது. அதனால்தான் இப்போது நான் இங்கு வந்து நின்றிருக்கிறேன். ‘சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்’, ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ , ‘சினிமா பாரடைஸ்’ இது போன்ற படங்கள் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. இது என்னைக் கவர்ந்தது. நான் ஓவியக் கலைஞராக இருந்தாலும் ஏன் திரைத்துறைக்கு செல்லக்கூடாது என நினைத்து தான் இதில் நுழைந்தேன். நாம் சினிமாவை இயக்கினால் நம்முடைய பிரச்சினைகளை சொல்லலாம் என நினைத்தேன். சொல்லப்படாத கதைகளை சினிமாவில் சொல்லலாம் என நினைத்தேன். இன்றும் சினிமா ஒரு ஆற்றல் வாய்ந்த சமூக ஊடகமாக இருக்கிறது. இந்த ஆற்றல் வாய்ந்த சமூக ஊடகத்தின் மூலமாக சொல்லப்படாத அல்லது மறைக்கப்பட்ட வரலாறை மக்களிடம் எளிதாக கடத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தேன்.‌ இதனால்தான் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன்.

ஏனெனில் இங்கு சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. எழுத்து வடிவிலும் எழுதப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. வரலாற்றில் குறிப்பிடப்படாத நிறைய பகுதிகள் இருக்கிறது. வரலாற்றை படிக்கும் போது நான் யார்?  என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி என்னுள் எழுகிறது. வரலாற்றில் நான் ஏன் இப்படி இருந்தேன்? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. என்னுடைய மக்களுக்கும் இப்படி ஒரு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஏன்?  இவ்வளவு பாகுபாடு இருக்கிறது. ஏன் பிரிவினை இன்றும் இருக்கிறது.. என பல கேள்விகள் இருக்கிறது.  இதற்கான பதிலை வரலாற்றில் தேடினால்… வரலாறு ஒரு பக்க சார்புடையதாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் கோணங்களில் இருந்து வரலாற்றில் எதுவும் சொல்லப்படவில்லை. அவர்களுடைய மொழி இல்லை.‌ அவர்களைப் பற்றிய குறிப்புகள் கூட இல்லை. தேடித்தேடி பார்க்கும்போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

இதுபோல்தான் சினிமாவிலும்… எது மாதிரியான படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என பார்க்கும் போது, ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் இருந்து எந்த படங்களும் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பான தேடலுடன் தான் நான் சினிமாவில் வந்தேன்.‌ குறிப்பாக பாபா சாகிப் அம்பேத்கரின் தீண்டப்படாதவர்கள் யார்? என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. அந்த புத்தகத்தை வாசிக்கும் போது தான் மறைக்கப்பட்ட வரலாறை உருவாக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது. கல்வெட்டுகளில் செதுக்கப்பட்ட எழுத்துகள் தான் வரலாறா? மறைக்கப்பட்ட வரலாற்றை எப்படி மீட்பது..?  ஒரு வரலாற்று ஆய்வாளருக்கு இருக்க வேண்டிய உணர்வை கற்பனையான உத்தி மூலம் மீள் உருவாக்கம் செய்வது தான் இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே அந்த வரலாற்றின் தேவையை உணர்ந்து அதனை திரைப்படங்களின் மூலமாக நான் தேடுகிறேன். ஒரு மாணவனாக… ஒரு வரலாற்று ஆய்வாளனாக… நான் இருப்பதை பெருமிதமாக கருதுகிறேன். இந்த சினிமா வரலாற்றை தேடுவதுடன் மட்டுமே நிறைவடைந்து விடுகிறதா..! அது இல்லை. சினிமா என்பது இங்கு ஒரு வலிமையான ஊடகமாக இருக்கிறது. மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. மக்கள் அதனுடன் மிகவும் உணர்வுபூர்வமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வரலாற்று ஆய்வுகளோ அல்லது நம்பிக்கைகளோ மட்டும் சினிமா அல்ல. அது வெற்றிகாரமானதாக மாற்றம் அடையுமா ? என எனக்கு கணிக்க தெரியவில்லை.‌

சினிமாவிற்குள் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்து தான் சினிமாவிற்குள் வந்தேன்.‌ ஆனால் சினிமா வித்தியாசமாக இருந்தது. அதிலும் தமிழ் சினிமா மிக வேறுபாடாக இருந்தது. தமிழ் சினிமாவில் நான் நினைக்கும் கருத்துக்களை சொல்ல முடியுமா..? என்ற பயமும் எழுந்தது. இந்த பயத்தை நீக்கியது எங்கள் இயக்குநர் வெங்கட் பிரபு தான். அவருடன் உதவியாளராக நான் பணியாற்றிய போது, ‘சென்னை 28’ படத்தில் அவர் சென்னையின் அடையாளத்தை கிரிக்கெட் மூலமாக பதிவு செய்திருந்தார்.‌ அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த திரைப்படத்தை இளைய சமுதாயத்தினர் கொண்டாடினார்கள். சென்னை 28 படத்தின் வாழ்வியலும்.. என்னுடைய வாழ்வியலும் வேறு வேறு அல்ல. இரண்டுக்கும் அதிக நெருக்கம் உண்டு.‌ அப்போது ஒரு கொண்டாட்டத்தை.. ஒரு மகிழ்ச்சியை.. சொல்லப்படாத கதைகள் மூலம் நாம் செல்லும்போது.. எளிதாக ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற ஒரு விசயத்தை வெங்கட் பிரபுவிடம் கற்றுக் கொண்டேன்.

அதன் பிறகு ஏற்கனவே நான் எழுதிய பல கதைகளை ஒதுக்கி விட்டு, ‘அட்டகத்தி’ படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன். என்னுடைய வாழ்வில் இருந்து நிறைய சம்பவங்களை எடுத்து அதனை சினிமாவாக உருவாக்கினேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் நீண்ட ஒரு கடிதத்தை எழுதி வழங்கினோம்.  அதில் எங்களுடைய நம்பிக்கையை சொல்லி இருந்தேன். அட்டகத்தி படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அந்த வாழ்வியலை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டவுடன் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உருவானது. இந்த நம்பிக்கையின் காரணமாக அடுத்ததாக ‘மெட்ராஸ்’ என்ற படத்தை இயக்கினேன். அந்தப் படத்தின் உருவாக்கத்தின் போதும் எனக்கு பயம் இருந்தது.  இந்தப் படத்தை உருவாக்கும் போது தயாரிப்பாளர்களிடம் இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படம். அவர்களுடைய கோணத்தில் இருந்தால் இந்த படம் உருவாகி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி இருந்தேன்.‌ தயாரிப்பாளர்களும், கார்த்தியும் இதனை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றியை அளித்தது. மெட்ராஸ் படம் வெற்றி பெற்றதாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அந்த படம் பிடித்ததாலும் எனக்கு ‘கபாலி’ படத்தின் வாய்ப்பினை வழங்கினார். எனக்கு அவருடன் பணியாற்றும்போது உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது.  அவருக்கு என்னுடைய அரசியல் மிகவும் பிடிக்கும். அந்தப் படம் வெற்றி பெற்றதால் தான் மீண்டும் எனக்கு ‘காலா’ படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.  அதன் பிறகு ‘சர்பட்டா பரம்பரை’ ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘தம்மம்’ இவையெல்லாம் என்னுடைய தேடல்கள் தான். வரலாற்றில் நான் யார்? என்பதனை தேடும் படைப்புகளாகத்தான் இவை இருந்தன.

இந்தத் தருணத்தில் தான் விக்ரம் என்னை அழைத்தார். சேர்ந்து பணியாற்றலாம் என விருப்பம் தெரிவித்தார். விக்ரமை பல வடிவங்களில் எனக்கு பிடிக்கும். அவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும். ஏனைய வணிக ரீதியான நட்சத்திரங்களை போல் நான் விக்ரமை பார்த்ததில்லை. ஏனெனில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக் கொள்பவர்.  ‘ஐ’ படத்தில் ஒரு சிறிய பகுதிக்காக தன்னை மாற்றிக் கொண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது.  அதில் அவருடைய கலை மீதான தீவிர நேசிப்பு எனக்குத் தெரிந்தது. இதுபோன்றது ஒரு மகா கலைஞருடன் இணைந்து பணியாற்றுவதில் விருப்பம் கொண்டேன்.‌ முதலில் அவருடன் இணைந்து பணியாற்றும்போது எனக்குள் பயம் இருந்தது. இயக்குநராக ஒரு கதையை எழுதி விட்டேன். இந்த கதையை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் விக்ரமுக்கு என சில தேவைகள் உண்டு. இதையெல்லாம் அவரை சந்திக்கும் போதே விவரித்தேன். அவரும் முழுமையாக புரிந்து கொண்டு அற்புதமான ஒத்துழைப்பை வழங்கினார். அவரிடம் கதையை கூட என்னால் ஒழுங்காக சொல்ல முடியவில்லை, ஆனால் நான் சொல்ல நினைத்ததை அவர் முழுவதாக புரிந்து கொண்டார். அவர் என் ஆத்மாவிற்குள் நுழைந்து அதனை புரிந்து கொண்டார் என நான் நினைக்கிறேன். நான் நினைத்ததை சொல்வதற்கு சரியான வார்த்தைகளை பயன்படுத்தத் தெரியாது. அதில் நான் பலவீனமானவன் தான். ஏனெனில் நான் என்னுடைய உலகத்திலிருந்து இயங்குபவன்.

அவர் ஒப்புக்கொண்டவுடன் அந்தத் தருணத்தில் இருந்து தான் எனக்குள் மிகப்பெரிய சவால் உருவானது. கலைக்காக தன்னை முழுதாக அர்ப்பணிக்கும் ஒரு கலைஞன்.‌ அவரை கையாள்வது மிகவும் கடினமானது என எனக்குத் தெரியும். அவரை அந்த கதாபாத்திரமாக உருமாற வைப்பதில் சவால் இருந்தது.‌ அதே தருணத்தில் மக்களிடத்தில் எளிதாக சென்று சேரும் வகையில் ஜனரஞ்சகமான படைப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கதை எழுதி முடித்த பிறகு.. பல இடங்களில் என்னை பயணிக்க வைத்தது. பல விசயங்களை தெரிந்து கொண்டேன். எழுத்தாளர்கள் தமிழ் பிரபா மற்றும் அழகிய பெரியவன் ஆகியோரிடத்தில் பெரும் விவாதமே எழுந்தது. இந்த கதைக்குள் பல சிக்கலான விசயங்கள் இருக்கிறது. இந்தப் படத்தில் புதிய உலகத்திற்குள் நாம் நுழைகிறோம். ஃபேண்டஸி மேஜிகல் ரியலிஸம் எனக்கு மிகவும் பிடிக்கும். புதிய ஜானரில் நான் இயக்கும் திரைப்படம் இது. இந்த புதிய உலகத்திற்குள் நான் நுழையும் போது எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் தான். இது எனக்கு புது நம்பிக்கையை அளித்தது.‌

விக்ரம் அந்த உலகத்திற்குள் என்னை எளிதாக பணியாற்ற வைத்தார். படப்பிடிப்பின் முதல் நாள் முதல் காட்சியின் போது நான் நினைத்த மாதிரி தங்கலானாக விக்ரம் வந்து நின்றார். அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.  அதிலும் அவர் காடையன் கதாபாத்திரத்தில் தோன்றும் போது என்னை ஆச்சரியப்படுத்தினார் இதற்காக நடைபெற்ற ஒத்திகையின் போதும் அவர் கலந்து கொண்டார்.  அவரிடமிருந்து நான் கலையை எப்படி நேசிப்பது என்ற விசயத்தை கற்றுக் கொண்டேன்.  ஒரு மாணவரை பரிசோதிக்கலாம் ஆனால் ஒரு ஆசிரியரை எப்படி பரிசோதிப்பது..? ஒரு ஆசிரியரை பரிசோதிப்பது போல் இருந்தது.

படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு விக்ரமிடம் மீண்டும் ரீசூட் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன், உடனே ஒப்புக்கொண்டார். சண்டைக் காட்சிகளில் அவருடைய விலா எலும்பு முறிந்தது. அந்தக் காட்சி நிறைவடைந்ததும் உடனடியாக என்னுடைய உதவியாளரை அழைத்து அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா? என்று கேள் என சொல்வேன். அவர்கள் விக்ரமிடம் கேட்டுவிட்டு வலி இருக்கிறது ஆனால் பொறுத்துக் கொள்கிறேன் என பதில் அளிப்பார். அதனால் மீண்டும் அதே காட்சியை படமாக்கினேன் இந்த விசயத்தில் அவரிடம் நான் சற்று கடினமாக நடந்து கொண்டேன். அதற்காக இந்த தருணத்தில் அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.  இதன் நோக்கம் என்னவென்றால் அவரை எப்படியாவது திரையில் தங்கலானாக கொண்டு வர வேண்டும் என்பதுதான். இதனை விக்ரமும் புரிந்து கொண்டு இன்றுவரை எனக்கு சகல விதங்களிலும் ஆதரவாக இருக்கிறார். இந்தப் படத்தின் மீது அவர் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார். என் மீதும் இந்தப் படத்தின் மீதும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வெற்றி பெற வேண்டும். என்னுடைய விருப்பமும் அதுதான். இது சாத்தியமாகும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

விக்ரமை தேர்ந்தெடுத்த பிறகு அவருக்கு இணையாக ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என நினைத்தபோது என் மனதில் தோன்றியவர் பசுபதி தான். அவரும் ஒரு திறமையான கலைஞர்.  இந்தப் படத்தில் அவருடைய நடிப்பும் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.‌ பார்வதி – மாளவிகா இருவரும் முக்கியமான கதாபாத்திரங்கள். இந்த திரைப்படத்தில் நிறைய பெண் கதாபாத்திரங்கள் இருக்கிறது.‌ பார்வதியை ‘பூ’ படத்திலிருந்து அவரை பின் தொடர்கிறேன். அவருடைய திறமைக்கேற்ப கதை இருந்தால் தான் அவரை அழைக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்தேன். மாளவிகா கதாபாத்திரத்தை எழுதி விட்டேனே தவிர.. இதனை திரையில் கொண்டு வருவதற்கு நிறைய சிரமப்பட்டேன். இதனை உணர்ந்த மாளவிகாவும் கடுமையாக முயற்சி செய்து நடித்திருக்கிறார். டேனியல்- அவருக்கும் எனக்கும் மொழி பிரச்சனை. அதன் பிறகு கலாச்சார பிரச்சனை. ஆனால் எல்லாவற்றையும் கடந்து டேனியல் அவருடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் அது சாத்தியமானது.‌ இந்த திரைப்படத்தை கருணையற்ற மனிதனாக இருந்தால் மட்டும் தான் உருவாக்க முடியும் என நான் நினைத்தேன்.

ஜீ வியுடன் இணைந்து பணியாற்றும் போது.. நட்புடன் பணியாற்றுவது போல் இருந்தது. எல்லாவற்றையும் விட என்னுடைய உணர்வை புரிந்து கொண்டு.. என்னுடைய தேடலை புரிந்து கொண்டு.. பொருத்தமான இசையை வழங்கி பெரும் பக்க பலமாக இருந்தார். இந்தப் படம் அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். நான் எப்போதும் படத்தை பொழுதுபோக்காக மட்டும் உருவாக்குவதில்லை. அதனுடன் சமூகத்திற்கு ஏதேனும் பலன் இருக்க வேண்டும் என்றும் நினைப்பேன்.‌ பொழுதுபோக்கு அம்சங்களை கடந்து இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒரு விசயத்தை வழங்கிட முடியும் என்பது தான் என்னுடைய பார்வை.‌

இந்த சமூகம் என்னை உருவாக்கியிருக்கிறது. இந்த சமூகத்தில் இருந்து நான் நிறைய பெற்றிருக்கிறேன். அதில் இன்பங்களும் உண்டு. துன்பங்களும் உண்டு. நிறைய படிப்பினையும் இருக்கிறது. இதில் நான் பல விசயங்களை உட்கிரகித்திருக்கிறேன்.  அதனை நான் கலை வடிவமாக மாற்றி சினிமாவாக உங்கள் முன் படைத்திருக்கிறேன். இந்த சினிமா உங்களுக்குள் இருக்கும் அந்த உணர்வை தொடும் என நம்புகிறேன். இதன் மூலம் இந்த சினிமா சில விவாதங்களை ஏற்படுத்தும். சில கேள்விகளை எழுப்பும். அந்த கேள்விகளுக்கான பதிலை தேடுவதன் மூலமாக வரலாற்றில் நாம் மறந்த.. மறைத்த.. பல விசயங்களுக்கான பதிலை பெற முடியும் என நம்புகிறேன். இதுதான் என்னுடைய வலிமை என நம்புகிறேன். இதுதான் என்னுடைய அரசியல். இந்த அரசியல் இல்லையென்றால் நான் இல்லை. இதற்காக அண்ணன் பாபா சாகிப் அம்பேத்கருக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்கிறேன். அவர்தான் ‘நீ உன் சமூகத்திற்காக.. உன் மக்களுக்காக.. பேசியாக வேண்டும்’ என்ற உத்வேகத்தை வழங்கியவர். அவருடைய குரலாக.. அவருடைய மாணவராக.. அவருடைய சீடராக.   தொடர்ந்து நான் இயங்குவேன்.‌ ” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *