நடிப்பின் அசுரன் தனுஷ் இயக்கி நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் திரைப்படம் ராயன். தனுஷின் 50வது படமான இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் சாதக, பாதகங்கள், வாய்ப்புகள், பிரச்சினைகளை இந்த முன்னோட்டத்தில் அலசுவோம்.
SWOT Analysis
Strength:
1) தனுஷ். நடிகராகவும் சரி, இயக்குனராகவும் சரி. மிகப்பெரிய பெயரை, மதிப்பை பெற்றுள்ளார் தனுஷ். நடிப்பில் தேசிய விருது உட்பட பல விருதுகள், இயக்குனராக முதல் படம் ப.பாண்டியில் சிறந்த இயக்குனர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். அவர் இயக்கும் இரண்டாவது படம். முதல் படத்துக்கு சம்பந்தமே இல்லாத முற்றிலும் மாறுபட்ட கதைக்களம். ஆக்ஷன், வன்முறை என வடசென்னை போன்ற அதகளமான படம். படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்ப்ய் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது.
2) மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம். எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி சரத்குமார், துஷாரா விஜயன், சரவணன் மற்றும் பல நடிகர்கள் இந்த படத்துல இருக்காங்க. அவர்களை எல்லாம் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் என்பது ட்ரைலரிலேயே தெரிகிறது. ஒரு சின்ன உதாரணமாக எஸ்.ஜே.சூர்யாவை சொல்லலாம். சினிமாத்தனம் இல்லாத அச்சு அசல் சென்னை மனிதனை பிரதிபலித்திருக்கிறது அவர் கதாபாத்திரம். மற்ற நடிகர்களும் அப்படியே. இதுவும் ராயன் ஒரு சிறந்த படமாக இருப்பதற்கான ஒரு அறிகுறி.
3) படத்தோட பட்ஜெட் கிட்டத்தட்ட 80-100 கோடி இருக்கும்னு சொல்றாங்க. தனுஷ் படங்களிலேயே பிரமாண்டமான படமாம். வடசென்னைக்கு போகாமலே 20 கோடி ரூபாயில் ஒரு ஏரியாவையே செட் போட்டு படம் பிடித்திருக்கிறாராம் தனுஷ். இது போல பல செட் போட்டு படம் பிடித்திருக்கிறாராம். புதுப்பேட்டை, வடசென்னையை போல ஒரு வித்தியாசமான கோணத்தில் இந்த படத்தில் வரும் வடசென்னையை பார்க்கலாம்.
4) ட்ரைலரில் பார்த்த வரையில் விஷூவல்ஸ் வேற லெவல்ல இருக்கு. லைட்டிங், கேமரா கோணம் என தெறிக்க விட்டிருக்கிறார்கள். பெரிய திரையில் இந்த காட்சிகளை பார்ப்பது ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது இரு பெரிய பிளஸ்.
5) இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இன்னொரு ஹீரோன்னு கூட சொல்லலாம். தனுஷ் இசையை கேட்டு வாங்குவதில் கில்லாடி. இதற்கு முன் தன் படங்களில் இயக்குனராக இல்லாவிட்டாலும் தானும் மியூஸிக் சிட்டிங்கில் அமர்ந்து யுவன், அனிருத், ஷான் ரோல்டான் என எல்லாரிடமும் சிறப்பான இசையை பெற்றிருக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் கை கோர்க்கிறார். பாடல்கள், இசை எல்லாம் ரசிகர்களிடம் பெரிய அளவில் சென்று சேர்ந்திருக்கிறது. அதுவும் ரஹ்மான் பாடும் “உசுரே நீ தானே” என்ற அந்த சின்ன பிட் படத்துக்கு பெரிய முகவரியாகவே மாறி இருக்கிறது.
6) தனுஷ் தோற்றம். இதுவரை எத்தனையோ படங்களில் எத்தனையோ கெட்டப்பில் தனுஷ் வந்திருந்தாலும் இந்த படத்தில் மொட்டை அடித்து ஒரு வித மிரட்டலான தோற்றத்தில் அசத்துகிறார். வன்முறை காட்சிகளில் அவரின் முழு ருத்ர தாண்டவத்தையும் பார்க்கலாம்.
7) பலரும் ராயன் ஒரு வன்முறை படம், ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் படம் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் ராயன் படத்தில் குடும்பம், உறவுகள், அன்பு போன்ற விஷயங்கள் தான் படத்தின் அடிநாதம். அது கிளிக் ஆகும் பட்சத்தில் படம் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்பதில் சந்தேகமில்லை.
8) படத்துக்கு “A” சான்றிதழ் கிடைத்திருப்பது படத்துக்கு இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்றி விட்டிருக்கு. “A” வாங்குற அளவுக்கு என்ன இருக்கும்? எந்த சமரசமும் இல்லாத படமா இருக்கும் போன்றவை படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங்கை கொடுக்கும். ராயன் படமும் ஒரு சிறப்பான சம்பவமாக இருக்கையில் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என்பது உறுதி.
9) படத்தின் நீளம். 2 மணி நேரம் 25 நிமிடங்கள். கமெர்சியல் படத்துக்கு கச்சிதமான ரன் டைம். பல படங்கள் நீளம் பிரச்சினை என் தெரிந்து ரிலீஸூக்கு பிறகு குறைக்கும்போது, ரிலீஸூக்கு முன்பே இது தான் நீளம் என முடிவு செய்தது இயக்குனர் தனுஷின் சாமர்த்தியம்.
Weakness:
1) படத்தின் பாஸிடிவாக சொன்ன ஒரு விஷயம் தான், “A” சான்றிதழ். வடசென்னை படத்துக்குப் பிறகு ராயன் தான் “A” சான்றிதழ் பெற்ற படம். வடசென்னை ஓபனிங், வசூல் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அன்றைய தேதியில் தனுஷின் நம்பர் ஒன் ஓபனிங், நம்பர் ஒன் வசூல் படம் வடசென்னை. ராயன் “A” சான்றிதழ் வாங்கியிருப்பதால் குடும்ப ரசிகர்கள் பலரும் குழந்தைகளுடன் வருவது தடைபடும். அதனால் மிகப்பெரிய வசூல் செய்வதில் சில தடைகள் இருக்கிறது. குடும்பங்கள் பார்த்து கொண்டாடிய திருச்சிற்றம்பலம் தான் தனுஷின் நம்பர் 1 படமாக இப்போதும் இருக்கிறது என்பது கூடுதல் தகவல். “A” சான்றுதழையும் மீறி மேஜிக்கை நிகழ்த்துவார்களா? என்பதை திரையில் பார்ப்போம்.
2) நிறைய நட்சத்திரங்கள் இருப்பது எந்தளவுக்கு பாஸிடிவான விஷயமோ அதே அளவுக்கு நெகடிவாகவும் அமையலாம், ஒரு வேளை அவர்கள் கதாபாத்திரம் வெறுமனே வந்து போவது போல் அமைந்திருந்தால். ரசிகர்கள் நிறைய எதிர்பார்த்து வருவார்கள். அதனால் அழுத்தமான கதாபாத்திரங்களாக இருப்பது முக்கியம். நாம் கேள்விப்பட்ட வகையில் எல்லா கதாபாத்திரங்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள்.
3) வடசென்னை கதைக்களம் என்பதால் இயல்பாகவே தனுஷின் முந்தைய கிளாசிக் படங்களான புதுப்பேட்டை, வடசென்னை படங்களுடன் ஒப்பீடு வரலாம். அதில் இருந்து எந்த அளவுக்கு வித்தியாசப்படுகிறது ராயன் என்பதும் முக்கியம். அதுவும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கியமான காரணி தான்.
Oppurtunities:
1) அடுத்த 3 வாரங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 15 வரை எந்த ஒரு பெரிய படமும் ரிலீஸ் இல்லை. 20 நாட்கள் எந்த தடையும் இன்றி ஓடும் வாய்ப்பு இருக்கிறது. சிறப்பான விமர்சனங்கள் வரும் பட்சத்தில் தனுஷின் கேரியரில் நம்பர் ஒன் வசூல் படமாகவும் அமையலாம்.
2) தெலுங்கிலும் தனுஷ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுவும் வடசென்னை, அசுரன், கர்ணன் போன்ற ரத்தம் தெறிக்கும் படங்களை அவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த படமும் அப்படி ஒரு வாய்ப்பை பெற்றால் மிகப்பெரிய வசூல வேட்டை நடத்தலாம்.
3) இந்த படம் அதிரி புதிரி வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தால் அடுத்து தனுஷ் இயக்கிய “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” படத்துக்கும் திரையுலகில் மிகப்பெரிய டிமாண்ட் ஏற்படும். தனுஷ் இயக்கத்தில் தேனாண்டாள் தயாரிப்பில் உருவாகி, பாதியில் நின்று போன பிரமாண்ட படத்தை சன் பிக்சர்ஸே தூசு தட்டி மீண்டும் உருவாக்க முன் வரும் வாய்ப்பும் இருக்கிறது.
Threats:
1) அதே நாளில் மார்வெல் ஸ்டுடியோஸின் ஆங்கில படமான டெட் பூல் அண்ட் வால்வரின் படம் ரிலீஸ் ஆவதும், எல்லா இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுவதும் ராயன் வசூலில் சிறு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
2) என்ன தான் “A” சான்றிதழ் இருந்தாலும் சென்னை போன்ற நகரங்கள், ஓவர்சீஸ் தவிர மற்ற எல்லா இடங்களிலும் குழந்தைகள் முதல் எல்லோரையும் அனுமதிக்கிறார்கள். அதீத வன்முறை காட்சிகளை குழந்தைகள் பார்க்கும் ஆபத்தும் இருக்கிறது.