நந்தனுக்கு முன், நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் – சமுத்திகரனி!

Era Entertainment சார்பில் இயக்குநர் இரா சரவணன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் நந்தன். சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  செப்டம்பர் 20-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் இரா சரவணன் பேசும்போது, “அண்ணன் சீமான் எப்போது இந்த நிகழ்வுக்கு வர ஒப்புக்கொண்டாரோ, அப்போதே நந்தன் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக ஆகிவிட்டது. அண்ணன் அவர் நண்பர்களோடு, குடும்பத்தோடு, இந்த திரைப்படத்தை பார்த்து, பாராட்டிய அன்று தான், நாம் ஒரு நல்ல திரைப்படத்தை செய்திருக்கிறோம், என்ற நம்பிக்கை வந்தது. ஒரு படத்தின் பிசினஸ் என்பது பொண்ணு பார்ப்பது மாதிரி, பொண்ணு எவ்வளவு அழகாக இருந்தாலும், பெர்ஃபெக்ட்டாக இருந்தாலும், வரதட்சணைக்கு கூட்டி கேட்பதற்கு, ஏதாவது குறை சொல்லி பேசுவது தான் வழக்கம். அது போல் தான் படம் பார்க்க வருபவர்களும்.. பிசினஸுக்காக படம் பார்க்க வருபவர்களும், படம் பார்க்கும் போது சிரிக்க கூட மாட்டார்கள், ஆனால் Trident Arts ரவீந்திரன் சார் படம் பார்த்து விட்டு, பிஸினஸ் பேசாமல், ஒன்றரை மணி நேரம் படத்தைப் பற்றிய என்னிடம் பேசினார். சார் படத்தின் பிசினஸ் என்று நான் ஆரம்பித்த போது, இந்த படத்தை நான் தான் வெளியிடுவேன் என்றார். இந்த விஷயத்தையும் சாத்தியப்படுத்தி தந்ததும் சசிகுமார் சார் தான். இந்த படத்தின் கதையை எழுதியபோது, வேறு சில ஹீரோக்களை மனதில் வைத்து தான் எழுதினேன், அவர்களை தேடித்தான் போனேன், ஆனால் நாம் மனதில் நினைத்ததெல்லாம் கிடைத்துவிடாது. ஆனால் எப்போதும் எனக்கு அண்ணனாக, முதுகெலும்புவாக இருக்கும் சசிகுமார் சார், சரி நான் செய்கிறேன் வா என்று என்னை அழைத்து சொன்னார். அந்த பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது. ஆனால் என்னை நம்பி வந்த சசிகுமார் சாரை, நான் எவ்வளவு மரியாதையாக நடத்தி இருக்க வேண்டும், ஆனால் நான் அப்படி நடத்தவில்லை, இனிமேல் உதவியே செய்யக்கூடாது என அவர் நினைக்கும் அளவு, கொடுமைப்படுத்தினேன். அந்த அளவு படப்பிடிப்பின் கடைசி சில நாட்கள், அவரை பாடாய்படுத்தினேன். முழு மக்களின் கூட்டத்திற்கு நிறுத்தி அடி வாங்கவிட்டேன். முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரமாக மாறி, இந்த படத்திற்காக அவர் முழுதாக உயிரையே தந்து நடித்த தந்தார். உண்மைக்கும் துளியும் குறையாத அளவு எடுக்க வேண்டும் என்று தான் அப்படி நடந்து கொண்டேன். படத்தின் இரண்டாவது கதாநாயகன் பாலாஜி சக்திவேல். அவரிடம் சொல்லும்போது சார் இந்த படத்தில் நீங்கள் தான் நாயகன் என்று தான் சொன்னேன், முதல் பாடலே அவருக்கு தான் வைத்திருக்கிறேன், எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும், சிரித்த முகத்துடன் நிதானமாக இருங்கள் எனும் ஒரு மிகச் சிறந்த பண்பை, அவரிடம் கற்றுக் கொண்டேன்” என்றார்.

இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரகனி பேசும்போது, “நந்தன் – ஒரு நல்ல கதையை நாம் எழுதிவிட்டால் போதும், அதுவே அதனை உருவாக்கிக் கொள்ளும், நாம் யாரையாவது நினைத்து எழுதியிருப்போம், ஆனால் அது முடிவு செய்வது தான். அப்படித்தான் சசிகுமார் இந்த படத்திற்குள் வந்திருக்கிறார். அப்படித்தான் இந்த கதையில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் என்னையும் நடிக்கச் சொன்னார்கள், நன்றி மகிழ்ச்சி. முதல் இரண்டு படங்களில், இரா சரவணனுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அதை இந்தப் படம் நிவர்த்தி செய்யும். நண்பன் சரி பட்ட கஷ்டத்திற்கெல்லாம், இந்த படம் அவனுக்கு பெருமை தேடித் தரும். நந்தனுக்கு முன் – நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான்.

நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் பேசும்போது, “இயக்குநர் சரவணனை எப்போது பார்க்கும்போதும் என் படத்தின் ஒரு வசனம் தான் எனக்கு ஞாபகம் வரும், ‘உங்க நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது, ‘ என்கிற வசனம் தான் அது. உண்மையிலேயே சரவணன் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மற்றவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குடும்பம் குழந்தை என அனைத்தையும் விட்டு விட்டு, சென்று நிற்பவர் தான் சரவணன், இப்போது அவர் பின்னால் நிற்பவர்கள் பார்க்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. இயக்குநர் பின்னால் எப்போதும் துணையாக நிற்பது அவர் மனைவி கலா அக்கா தான், அவர் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு வந்து, இந்த படத்திற்காக பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தார். நாங்கள் பட்ட கஷ்டத்தை எல்லாம் விட, அவர் பட்ட கஷ்டம் தான் அதிகம். அதையெல்லாம் பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும், நாங்கள் பட்ட கஷ்டத்திற்கு பின்னால் விருதுகளே கிடைக்கும். இந்த படத்தை முதலில் நான் தயாரிப்பதாக தான் இருந்தது, அப்போது நான் நான்கு நாட்கள் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன் ஆனால் இறுதியில் நான் நாயகனாக மாறிவிட்டேன். முதலில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் தான் நான் நடிப்பதாக இருந்தது, பின்னால் அவர் படும் கஷ்டத்தை பார்த்து, நானே செய்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன். உங்களை வேறு மாதிரி பார்க்கிறேன், எப்படி இந்த கேரக்டரில் கஷ்டப்படுத்துவது என தயங்கினர், ஆனால் நான் அவரை சமாளித்து, நடித்திருக்கிறேன். உங்கள் எல்லோரையும் கண்டிப்பாக இந்த படம் திருப்தி செய்யும்” என்றார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசும்போது, “ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான், நாம் பார்த்த பிறகும் நம் மனதில் தாக்கத்தை உருவாக்கும் படி இருக்கும். அப்படி ஒரு திரைப்படத்தைத் தான் நம் நண்பர் நம் இயக்குநர் இரா சரவணன் உருவாக்கி இருக்கிறான். பல நூறு ஆண்டுகளாக இந்த இனம் தூக்கிச் சுமந்து வரும் வலியை, திரை மொழியில் பதிவு செய்து இருக்கிறான் இரா சரவணன். இந்தப்படம் மிகப்பெரும் தாக்கத்தைப் பார்த்த பிறகும் இன்றும் தந்துகொண்டு இருக்கிறது. என் தம்பி சசி நடித்த அயோத்தி திரைப்படத்தைப் பார்த்து நான் பாராட்டி இருந்தேன். அந்த திரைப்படத்தில் அவன் சசியாகவே இருந்தான், ஆனால் இந்த நந்தன் திரைப்படத்தில் முதல் காட்சியிலிருந்தே கூழுப்பானையாகவே மாறி இருக்கிறான் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறான். அப்படி ஒரு உடல் மொழி, அருமையான உச்சரிப்பு, அவ்வளவு அருமையான நடிப்பு, அதே போல் மிகச்சிறப்பான நடிப்பை, வழங்கி இருக்கிறார் நடிகை ஸ்ருதி. அவர் நடிப்பும் கண்டிப்பாகப் பேசப்படும். அதேபோல் மிக முக்கியமான பாத்திரத்தில் நண்பன் சமுத்திரகனி மிக அருமையாக நடித்து இருக்கிறான். படத்தை தாங்கி நிற்கும் தூணாக மிக முக்கியமான பாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார். மிக அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார் ஜிப்ரான், ஒருவர் கூட ஒரு சிறு முகச்சுழிப்பை கூட தவறாக நடிக்கவில்லை, அத்தனை அற்புதமாக நடித்துள்ளனர். மனதைத் தாக்கும் மிக நல்ல படைப்புகளை பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்ற ஆளுமைகள் வழங்கி வந்தார்கள். இப்போது அப்படியான படைப்புகள் வருவதே இல்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் ஒரு சிறந்த படைப்பாக இந்த திரைப்படம் வந்திருக்கிறது. மிக அருமையாக நாம் வாழும் நிலத்தின் கதையை வழங்கி இருக்கிறான் சரவணன். வலியின் மொழி தான் இந்த திரைப்படம், வலி உங்களுக்குப் புரிந்தால் இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு ஒரு ஆகச் சிறந்த படைப்பு, என் தம்பிகள் இணைந்து மிகச் சிறந்த படைப்பை வழங்கியிருக்கிறார்கள். அவனோடு இணைந்து ஒத்துழைத்து, இப்படைப்பை வழங்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *