தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் அறிமுகமாகி, கைதி படத்தில் மூலம் இந்திய சினிமா முழுக்க அறியப்பட்ட நடிகராக மாறிய அர்ஜூன் தாஸ் தொடர்ந்து நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை வசீகரித்தவர் அர்ஜூன் தாஸ். இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது அர்ஜூன் தாஸ் பேசும்போது, “2019 கைதி படத்தில் ஆரம்பித்து எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது பத்திரிக்கையாளர்கள் தான். என் கேரியரில் உங்கள் பங்கு மிக அதிகம். என் கேரியரின் ஆரம்ப கட்டத்திலேயே லோகேஷ், ஹலிதா ஷமீம், வசந்தபாலன், சாந்தகுமார் போன்ற சிறந்த இயக்குனர்கள் படங்கள் எனக்கு கிடைத்தது என் பாக்கியம்.
சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி அடுத்து வாரம் ரிலீஸ் ஆகிறது. சில நேரங்களில் சில மனிதர்கள் இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கும் படம் முடிந்துள்ளது, இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும். பவன் கல்யாண் சார் நடிக்கிற OG படத்துல நடிக்கிறேன். இயக்குனர் மதுமிதா இயக்கியுள்ள அங்கமாலி டைரீஸ் இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறேன்.
சாந்தகுமார் இயக்கத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவம். அவரோட மௌனகுரு, மகாமுனி எனக்கு ரொம்ப புடிச்ச படங்கள். இந்த ரசவாதி படத்துல ரொமான்ஸ் இருக்கும். அது எனக்கு புதுசு.
நிறைய பேர் வாய்ஸ் ஓவர் பண்ண சொல்லி அழைக்கிறார்கள். ஆனா அதை எல்லாம் பண்ணல. லோகேஷ் எதாச்சும் வாய்ஸ் ஓவர் பண்ண கூப்பிட்டால் கண்டிப்பா பண்ணுவேன்.
எனக்கு பதில் வேறு ஒருவர் கதை கேட்கிறார் என்ற தகவலில் உண்மை இல்லை, நான் தான் கதை கேட்கிறேன், அறிமுக இயக்குனர்கள் பலரிடமும் கதை கேட்டு வருகிறேன். அவர்கள் புதுசா எதாச்சும் கொண்டு வருவாங்க, அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம் என்ற ஆசை இருக்கு.
எங்க போனாலும் லோகேஷ் பத்தி ஏன் பேசுறேன்னா என் சினிமா பயணம் ஆரம்பித்தது அவரால் தான். அவரோட கைதி படத்தால் தான் இங்க நான் இருக்கேன். கைதி, மாஸ்டர், விக்ரம்னு தொடர்ந்து வாய்ப்பும் கொடுத்திருக்கார். அவர் எனக்கு ஒரு குரு மாதிரி. கமல் சார் நடிக்கிறதை பார்க்கணும் என்பதற்காக லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக வேலை செய்ய வாய்ப்பு கேட்டேன். ஆனா அந்த வாய்ப்பு கிடைக்கல், அதிர்ஷ்டவசமா எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைச்சது விக்ரம் படத்துல. லோகேஷ் கனகராஜ் நடித்த இனிமேல் ஆல்பம் வீடியோ பார்த்தேன். ரொம்ப செம்மயா நடிச்சிருந்தார். ஆனா தொடர்ந்து நடிப்பாரானு எனக்கு தெரியாது. கைதி 2 படத்துக்கு நான் ரொம்பவே வெயிட்டிங். இதுவரைக்கும் அழைப்பு இன்னும் வரல.
எனக்கு போட்டியாக எந்த நடிகரையும் நினைக்கவில்லை. இப்போ தான் நானே சில படங்களில் நடிச்சிட்டு இருக்கேன். என் படங்கள்ல வன்முறை அதிகம்னு சொல்றாங்க. அடுத்து நடிக்கிற படங்கள்ல அப்படி வன்முறை எதுவும் அதிகம் இருக்காது. நிச்சயமா நீங்க நம்பி பார்க்கலாம்.
இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. ஐஸ்வர்யா லக்ஷ்மி என்னுடைய நல்ல தோழி. அவருடன் ஒரு புகைப்படம் எடுத்து ஷேர் செய்தேன், அவ்வளவு தான். அவருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களில் உண்மை இல்லை” என்றார்.