Chalk cheese ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் T-Series இணைந்து தயாரிக்க, ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஷரத் கெல்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் போலா என்பவரின் பார்வை வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் மே 10ஆம் தேதி வெளியாகிறது. துஷார் ஹிரனந்தானி இயக்கியிருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் நடிகை ஜோதிகா பேசும்போது, “ஸ்ரீகாந்த் போலா வாழ்க்கையை மையப்படுத்திய கதையில் நானும் ஒரு முக்கிய பங்காக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்ரீகாந்தை பார்த்த பின் நான் என்னை பார்க்கும் கண்ணோட்டமே மாறியுள்ளது. காக்க காக்க, ராட்சசி படங்களுக்கு பிறகு 3வது முறையாக ஆசிரியையாக நடிக்கிறேன். என் அம்மா தான் எனக்கு எப்பவுமே டீச்சர். என் ஆங்கில ஆசிரியை என் வாழ்வில் முக்கியமானவர். அந்த ஆசிரியர்களால் தான் நான் இங்கு இருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். மையக் கதாபாத்திரத்துக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு கதாபாத்திரம். இந்த கதை ரொம்பவே ஊக்கம் அளிக்கும் கதை, திரையில் சொல்லப்பட வேண்டிய கதை. ஒரு கதையில் ரெண்டு சீன் பிடித்தால் போதும், நான் நடித்து விடுவேன். 3வது முறையாக இந்தி திரைப்படத்தில் நடிக்கிறேன். 40, 50 படங்கள் நடித்த பின் எந்த மொழியில் நடிப்பதும் கஷ்டம் இல்லை, நல்ல, திறமையான மனிதர்கள் உடன் இணைந்து நல்ல கதைகளில் நடிப்பதால் எந்த கஷ்டமும் இல்லை.
திருமணத்துக்கு பிறகு தான் நிறைய ரியல் லைஃப் பெண்களை அதிக சந்திக்க நேர்ந்தது. அவர்களை எல்லாம் பார்க்கும்போது தான் இந்த மாதிரியான அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பெண்களின் கதாபாத்திரங்கள் நடிக்கணும் என்பதை உணர்ந்தேன். என் வாழ்க்கையில் எந்த திட்டமும் இருந்ததில்லை. 6 வருடங்கள் நடித்தேன். பின் 7 வருடங்கள் திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்தேன். இப்போது நடித்து வருகிறேன். தொடர்ந்து நல்ல கதைகள் நடிக்கணும், அது தான் என் ஆசை. நிறைய வெளியில் தெரியாத ஹீரோஸ் இருக்காங்க, அவர்கள் பயோபிக்கில் நடிக்கணும். தமிழிலும் நிறைய கதைகள் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். நல்ல கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
பெரிய இயக்குனர்கள் நாயகிகள் உடன் இணைந்து படம் பண்ண முன் வராதது ஏன், அவர்கள் எங்களை வைத்து பெரிய படங்களை எடுக்க முன் வரணும். நாயகிகளை மையப்படுத்திய கதைகள் வரணும். அதே போல சூர்யா – ஜோதிகா காம்பினேஷன் அமையாததற்கு காரணம் அப்படி ஒரு நல்ல கதை அமையலை, அமைஞ்சா கண்டிப்பா சேர்ந்து நடிப்போம்.
அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. இப்போதைக்கு என் குழந்தைகள் மீது தான் என் முழு கவனமும் இருக்கிறது. ஃபிட்னெஸில் எனக்கு ஆர்வம் அதிகம். தினமும் ஒரு 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யணும், அது நமக்கு குறிப்பா பெண்களுக்கு மிகவும் முக்கியமான விஷயம். என் குழந்தைகளின் முழு கவனமும் படிப்பில் தான் இருக்கிறது. இப்போதைக்கு அவர்களுக்கு நடிக்கும் எண்ணம் இல்லை” என்றார்.
இயக்குனர் துஷார் ஹிரனந்தானி பேசும்போது, “ஸ்ரீகாந்த் போலாவை நேரில் பார்த்தால் புரியும், அவர் அப்பாவி கிடையாது. ரொம்பவே ஸ்மார்ட். பார்வையற்றவராக இருந்தாலும் அவர் அதை ஒரு குறையாக உணர்ந்ததே இல்லை. அவர் தடி ஊன்றி நடப்பவர் அல்ல. மிகுந்த தன்னம்பிக்கை உடையவர். அவர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்ததில் எனக்கு ரொம்பவே ஆத்ம திருப்தி. ராஜ்குமார் தான் ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதிலும், ஜோதிகா தான் ஆசிரியராக நடிக்க வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன், இன்னும் நிறைய பயோபிக் கதைகளை இயக்க ஆசை” என்றார்.