புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் எதிர்பார்ப்புக்குரிய தமிழ்-தெலுங்கு இருமொழி படத்திற்கு திறமையான நடிகர் பரத்தை வரவேற்பதில் ரஃப் நோட் புரொடக்ஷன் மகிழ்ச்சி அடைகிறது.
‘காதல்’, ‘பட்டியல்’, ‘காளிதாஸ்’ போன்ற திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் கவனம் பெற்ற பரத், இந்தப் படத்தில் ஒரு உணர்ச்சிமிக்க மற்றும் ஆழமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இவர் நடிக்கும் கதாபாத்திரம், கதையின் நாகர்வுக்கு மிக முக்கியப் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. கதாபாத்திரத்தின் தீவிரம், ஆழ்மன குழப்பங்கள் மற்றும் உளவியல் சார்ந்த நுணுக்கமான மாற்றங்களை மையமாகக் கொண்ட இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பரத்தின் இன்னொரு பக்கத்தை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தனது அழுத்தமான கதாபாத்திர தேர்வும், திரையில் தோன்றும் விதத்தின் மூலமும் தெலுங்கு ரசிகர்களிடமும் பரிச்சயமானவராக இருக்கும் பரத்துடன் கைகோர்ப்பதன் மூலம், இந்த படம் ஒரு பான் தென்இந்தியா பட உணர்வை வழங்கி, அதன் இருமொழித் தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது.
நடிகர் பரத் தேர்வைப் பற்றி இயக்குநர் விஜய் மில்டன் கூறும்பொழுது: “பரத் ஒரு நடிகராகக் கட்டுப்பாடும், உணர்ச்சி நுட்பமும் கொண்டவர். இந்தப் படத்தில் அவர் செய்யும் பாத்திரம் கதைமுழுவதற்கும் உணர்வுகளின் உச்சமாக உள்ளது — முடிவெடுக்க முடியாத தன்மை, அதனால் ஏற்படும் விளைவுகள், அதிலிருந்து வரும் மாற்றங்கள் என நெகிழ்ச்சியான மனிதனாக வருகிறார்.” என்று கூறினார்.
ஏற்கனவே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிற இந்த இருமொழி திரைப்படத்தில் நடிகர் ஆரி முதல்முறையாக ஒரு போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார், டோலிவுட் நடிகர் ராஜ் தருண் தமிழில் அறிமுகமாகிறார், மேலும் இசை வெளியீட்டு ஷென்சேஷன் பால் டப்பா தனது நடிப்பு பயணத்தை தொடங்குகிறார். இந்த கூட்டணியில் பரத்தின் சேர்க்கை, படத்திற்கு ஆர்டிஸ்ட் வேல்யூவையும், கதைக்கு ஸ்திறத்தன்மையும் கூட்டித் தருகிறது.
சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியையும், உணர்வுகளுக்கு மதிப்பு தரும் கதையமைப்பையும் கொண்ட இந்த திரைப்படம், விஜய் மில்டனின் படைப்புகளுக்கே உரிய அடையாளங்களை கொண்டு, நிஜத்தையும், தீவிரத் தன்மையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு உண்மையான சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வத் தலைப்பு ஜூன் 15ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் இதையடுத்து பல சுவாரஸ்யமான அப்டேட்கள் மற்றும் நடிகர்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவுள்ளன. வித்தியாசமான மற்றும் வலிமையான படக்குழுவை உருவாக்கி வரும் Rough Note Productions, இந்தப் படம் ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இருக்கப்போகிறது என்று ரசிகர்களுக்கு உறுதி அளிக்கிறது.