நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் மற்றும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா இருவருக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள அர்ஜூனின் ஆஞ்சநேயர் கோவிலில் எளிமையான முறையில் உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது. இரு நாட்களுக்கு முன் சினிமா, அரசியல் பிரபலங்கள் சூழ வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிலையில் ஐஸ்வர்யா – உமாபதி தம்பதி பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்கள் மகிழ்வான தருணங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் அர்ஜூன், தம்பி ராமையா ஆகிய இருவரும் மணமக்களுடன் இணைந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் தம்பி ராமையா, “நான் அர்ஜூன் சாரை சம்மந்தியாக பார்க்கவில்லை, இப்போது வரையிலும் சார் என்றே அழைக்கிறேன். அவரும் அப்படி தான் என்னை அழைக்கிறார். ஐஸ்வர்யா எனக்கு இன்னொரு மகள். இப்போது எங்கள் மருமகளாக வீட்டிற்கு வந்திருக்கிறார். எங்கள் இரு குடும்பத்தின் நிம்மதியும் ஐஸ்வர்யாவிடம் தான் இருக்கிறது. அந்த நிம்மதியும் சந்தோஷமும் காலம் முழுவதும் நிலைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.
நடிகர் அர்ஜூன் பேசும்போது, “உமாபதி நல்ல திறமையான ஒரு இளைஞன். எனக்கு ஆரம்பத்தில் நான் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியின் போதே நல்ல அறிமுகம். இப்போது என்னுடைய மருமகனாக எனது குடும்பத்துக்கு அவரை வரவேற்கிறேன். எனது இரண்டாவது மகள் ஒருநாள் என்னிடம் வந்து ஐஷூ ஏதோ என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னார். நானே ஒரு இயக்குனர் என்பதால் கண்டிப்பாக காதல் விஷயம் தான் என தெரிந்து கொண்டேன். ஆனால், பையன் யாருனு தெரிஞ்சிக்க ஆர்வமாக இருந்தேன். உமாபதி என்று ஐஸ்வர்யா சொன்னதும் எனக்கு ஆச்சரியம். இதற்கு முன்பு நானும் ராமையா சாரும் நிறைய படங்கள் நடித்திருப்பதால் அவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். நல்ல குடும்பத்திற்கு எனது மகள் மருமகளா சென்றது பெருமையான தருணம். எத்தனையோ பட விழாக்களில் ஒரு நடிகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக மீடியா முன் நின்றிருக்கிறேன். இன்று ஒரு தகப்பனாக நிற்பது ஒரு புது அனுபவம். எனது மகள் குழந்தையாக பார்த்த தருணம் நேற்று நடந்தது போல இருந்தது. ஆனால், இன்று கணவருடன் நிற்கும் நேரம் வந்தது எமொஷனலாக இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா நடிப்பாரா? என்று பலரும் கேட்டனர். வாழ்க்கை பெரிது. அதில் தொழில் சிறியது. எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முடிவை ஐஸ்வர்யாவே எடுப்பார்” என்றார்.