கோபுரம் ஃபிலிம்ஸ் ஜிஎன் அன்புச் செழியன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் “இங்க நான் தான் கிங்கு”. பிரியாலயா, தம்பி ராமையா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், ’லொள்ளு சபா’ மாறன், கூல் சுரேஷ் ஆகியோர் நடிக்க இவர்களுடன் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் சேஷூ உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். முழுநீள காமெடி படமாக உருவாகியுள்ல இந்த படம் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்குமா? திருப்திப்படுத்துமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தனக்கென குடும்பம், உறவு என யாருமே இல்லாத நாயகன் சந்தானம் திருமணம் செய்ய பல முயற்சிகளை எடுக்கிறார். சொந்தமா வீடு இருந்தா கல்யாணம் ஈஸியா நடக்கும் என்று 25 லட்சம் கடன் வாங்கி சொந்தமாக ஒரு ஃபிளாட்டையும் வாங்குகிறார். கல்யாண புரோக்கர் மனோபாலா ரத்தினபுரி ஜமீன்தார் தம்பி ராமையா பற்றி எடுத்துச் சொல்லி அவர் பெண்ணை பார்க்கலாம் என அழைத்துச் செல்கிறார். எப்படியும் 25 லட்சம் வரதட்சணை வாங்கி கடனை அடைத்து விடலாம் என கணக்கு போடுகிறார் சந்தானம். போன இடத்தில் உடனே திருமணத்தையும் முடித்து விடுகிறார். திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் கடன் கொடுத்தவர்கள் எடுத்துக் கொண்டு போகிறார்கள். வங்கியில் வாங்கிய 10 கோடி கடனுக்கு வீட்டையும் ஜப்தி செய்கிறார்கள். ஜமீன்தார் தம்பி ராமையா, அவரது மகன் பால சரவணன் ஆகியோரும் சந்தானம் வீட்டுக்கே வந்து தங்குகிறார்கள். இதற்கிடையில் சென்னையில் தாக்குதல் நடத்த ஒரு தீவிரவாத கும்பல் திட்டம் தீட்டுகிறது. அந்த கும்பலுடன் சந்தானம் வாழ்க்கை எந்தப் புள்ளியில் இணைகிறது. சந்தானம் தன் கடனை அடைத்தாரா? அவர் வாழ்க்கை என்னவானது? என்பதே மீதிக்கதை.
சமீபத்திய சந்தானம் படங்களை விடவும் இந்த படத்தில் காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கல்யாணம் செய்தும் தன் மாமனார், மைத்துனனால் அவதிப்படும் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். அவர் அடிக்கும் பல ஒன் லைனர்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. தம்பி ராமையா, பால சரவணன் ஆகியோருடன் அவர் வெறுப்புடன் பேசும் பல காட்சிகளும் செம்ம காமெடி. இந்த மூவருடன் விவேக் பிரசன்னா, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், சேஷூ, சுவாமிநாதன் ஆகியோரும் சேர்ந்து அடிக்கின்ற கூத்து எல்லாமே தியேட்டரில் ரகளை. அதுவும் விவேக் பிரசன்னா சிரித்த மேனியுடன் செய்யும் அலப்பறை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. வேட்டி சட்டை இல்லாமலே ஊரு விட்டு சென்னை வந்து இறங்கும் தம்பி ராமையா, வீட்டை விட்டு வெளியே போனா சோத்துக்கு என்ன பண்றது என கேட்கும் பால சரவணன், ட்ராஃபிக் ரூல்ஸை ஃபாலோ பண்ணும் கூல் சுரேஷ், பாடியை வைத்து டீல் பேசும் முனீஷ்காந்த் என தொடர் காமெடி சரவெடி. நாயகி பிரியாலயா இத்தனை காமெடி நடிகர்களுக்கு மத்தியிலும் நன்றாகவே ரெஜிஸ்டர் ஆகிறார். அந்த தீவிரவாதிகள் கிளைக்கதை தனியாக தெரிந்தாலும் அதை காமெடியில் அழகாக இணைத்திருக்கிறார்கள்.
டி.இமான் இசையில் குலுக்கு குலுக்கு, மாயோனே, மாலு மாலு என மூன்று பாடல்களுமே நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் படத்துக்கு ஏற்ற இசையை வழங்கியிருக்கிறார். ஓம் நாராயண் ஒளிப்பதிவும், தியாகராஜனின் எடிட்டிங்கும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனத்தில் ஆனந்த் இயக்கியிருக்கிறார். வெள்ளக்கார துரை, தேசிங்கு ராஜா என எழில் பாணியில் கதை, திரைக்கதை அமைந்திருக்கிறது. படம் நெடுக காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. ரத்தினபுரி ஜமீன் வீடு சீக்வன்ஸ், ஃபிளாட் டெட்பாடி சீக்வன்ஸ், ஹாஸ்பிடல் சீக்வன்ஸ், கிளைமாக்ஸ் சீக்வன்ஸ், சேஸிங் சீக்பன்ஸ் என அடுத்தடுத்து எல்லாமே ரகளையான காட்சிகள் தான். எடுத்துக் கொண்ட கதையை சிறப்பாக கையாண்டிருக்கிறார். முந்தைய சந்தானம் படங்களை விடவும் இந்த படத்தில் ரசிகர்கள் காமெடியை ரசிக்க முடியும். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஒரு கோடைக் கொண்டாட்டம் தான் இங்க நான் தான் கிங்கு.