ஜென்டில்வுமன் – விமர்சனம்!

மலையாளத்தில் இருந்து வந்து தமிழில் பல படங்களில், அதுவும் தான் ஒரு மிகச்சிறந்த நடிகை என்பதை தான் நடிக்கும் படங்களின் மூலம் நிரூபித்தவர் லிஜோமோல் ஜோஸ். சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம், காதல் என்பது பொதுவுடமை என அவர் நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு ரகம். அந்த வகையில் அவர் நடித்தாலே அந்த படத்தை நிச்சயம் பார்க்கணும் என சினிமா ரசிகர்களிடம் ஒரு வித எதிர்பார்ப்பை தூண்டுகிறார். அந்த வகையில் இந்த வாரம் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் “ஜெண்டில்வுமன்”. ட்ரைலரிலேயே வித்தியாசம் இருந்தது, படம் எப்படி இருந்தது? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, புதுமணத் தம்பதிகளான லிஜிமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன் சென்னையில் மிக அன்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். தன்னுடைய கணவர் தன்னை ரொம்ப சந்தோஷமாக பார்த்துக் கொள்கிறார் என்று லிஜோவுக்கும் மகிழ்ச்சி. திருமணமாகி மூன்று மாதங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் ஹரி கிருஷ்ணன் வேலை விஷயமாக வெளியூர் செல்கிறேன் என சொல்லி கிளம்புகிறார். லிஜோ மருத்துவமனைக்கு செல்கிறார். அவர் வீட்டுக்கு திரும்பியபோது ஹரி கிருஷ்ணனுக்கு வேறு ஒரு உறவு இருந்தது தெரிய வருகிறது.

சில நாட்கள் கழித்து ஹரி கிருஷ்ணன் சில நாட்களாக காணவில்லை என, அவரைத் தேடி அவர் வீட்டுக்கு வருகிறார். பின் போலீஸ் ஸ்டேஷன் சென்று அவரை தேட முயற்சி எடுக்கிறார். லிஜோவுக்கு லாஸ்லியா யார் என்ற உண்மையும் தெரிய, லாஸ்லியா ஹரிக்கு எங்கே என்பதை கண்டுபிடிக்க விழைய, இறுதியில் என்ன ஆனது? ஹரி கிருஷ்ணனுக்கு என்ன ஆனது? லிஜோவின் மனநிலை என்ன? லாஸ்லியா உணர்வுகளை புரிந்து கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

லிஜோ மோல் ஜோஸ். தாய் தந்தை இல்லாத, சராசரி ஊர்க்காரப் பெண்ணாக, அதே சமயம் மனதளவில் ஸ்ட்ராங்கான பெண்ணாக அவருடைய கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக ஏற்று நடித்துள்ளார். ஆரம்பத்தில் கணவருடன் மகிழ்ச்சியாக கழியும் நாட்களாகட்டும், பின் முக்கியமான காட்சியில் அவரது எண்ண ஓட்டமாகட்டும், லாஸ்லியாவுடனான சந்திப்புகளாகட்டும் எல்லாவற்றிலுமே அவர் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். இந்த படத்திலும் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

லாஸ்லியா, ஒரு வித ஏக்கத்துடனும், தேடலுடனும், பரிதவிப்புடனும் சுற்றும் ஒரு கதாபாத்திரம். ஒரு கிறிஸ்தவ பெண்ணாக, மாடர்ன் பெண்ணாக அவரது நடை உடை பாவனை என அனைத்திலும் கச்சிதம். ஹரி கிருஷ்ணன் ஆரம்ப காட்சிகளில் இருந்தே இவர் நல்லவரா? கெட்டவரா? என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தும் விதமான ஒரு நடிப்பு. ஒரு முக்கியமான காட்சியில் அவரின் மனவோட்டம் உண்மையிலேயே என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ராஜிவ் காந்தி இரண்டாம் பாதியில் அப்ளாஸ் அள்ளுகிறார். அவர் வரும் காட்சிகள் ரசிகர்களை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்குகிறது.

சா. காத்தவராயன் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். 19 நாட்களில் எடுத்த படம் என்பதை நம்பவே முடியவில்லை. லைட்டிங், ஸ்மோக் எஃபெக்ட், இரவு காட்சிகள் என எல்லாமே மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக நாயகிகள் இருவரையும் முக அழகாக திரையில் காட்டியிருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்தின் ஆன்மாவாக இருக்கிறது. குறிப்பாக மிக முக்கியமான மாண்டேஜ் காட்சிகளிலும், தனிமை காட்சிகளிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கிறது.

இயக்குனர் ஜோஷூவா சேதுராமன், நாம் ஏற்கனவே செய்திகளில் பார்த்த கேட்ட சம்பவங்களை பின்னணியாக கொண்டு அதில் பெண்களின் உணர்வுகளையும், பெண்களின் எண்ண ஓட்டங்களையும், பெண்ணியத்தையும் மிக அழகாக பேசியுள்ளார். குறிப்பாக முதல் பாதியில் ஐந்தாறு பெண்கள் உரையாடும் ஒரு காட்சியும், லிஜோ லாஸ்லியா உரையாடல் காட்சியும், கிளைமாக்ஸில் லாஸ்லியா பேசும் முக்கியமான வசனங்களும் படத்தின் முதுகெலும்பாக அமைந்திருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் நல்ல மேக்கிங்குடன் ஒரு நல்ல உரையாடலையும் நிகழ்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜோஷூவா சேதுராமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *