நல்ல ரிலீஸ் தேதிகளை குறிவைத்து மிகச் சரியாக படங்களை கொடுக்கும் சந்தானம் கடந்த சம்மரில் இங்க நான் தான் கிங்கு படத்தை தந்திருந்தார். தற்போது இந்த சம்மரில் சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் “டிடி நெக்ஸ்ட் லெவல்”. படம் வெற்றியை பெற்றுத் தருமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தவறான சினிமா விமர்சனம் செய்பவர்களை ஒரு தியேட்டருக்கு வரவழைத்து அவர்களை கொலை செய்யும் செல்வராகவனை ஒரு கும்பல் கொலை செய்து விட, செத்தா எல்லாம் முடிஞ்சிடுமா? என சொல்லி பேயாக மாறி மீண்டும் அதே வேலையை செய்கிறார். ஹிட்ஸ்காக் இருதயராஜ் என்ற பெயரில் மீண்டும் பலரை அங்கு அழைக்கிறார். அப்படி சந்தானத்திற்கு ஒரு சிறப்பு திரையிடலுக்கான அழைப்பு வருகிறது. அவர் குடும்பமும் சந்தானத்துக்கு தெரியாமல் அந்த திரையரங்கத்திற்கு செல்ல, அங்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த சந்தானம் அவர்களை காப்பாற்ற முயற்சி எடுக்கிறார். தியேட்டரில் இருந்து அந்த படத்துக்குள் சிக்கிக் கொள்ளும் அவரது குடும்பத்தை சந்தானம் எப்படி காப்பாற்றுகிறார்? என்பதை காமெடி கலந்த ஹாரர் படமாக அத்துடன் பல ஜானர்களையும் இணைத்து சொல்லியிருக்கும் படம் தான் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’.
நாயகன் சந்தானம். அவருக்கே உரித்தான ஸ்டைலில் காமெடி ஹாரர் ஜானரில் வழக்கம் போல நடித்திருக்கிறார் சந்தானம். அவரது நடை, உடை, பேச்சு என ஒரு புள்ளிங்கோ மாடுலேஷனில் படம் முழுக்க வந்திருக்கிறார். மொட்ட ராஜேந்திரன் உடன் அவரது காமெடிகள் எல்லாமே வழக்கம் போல விழுந்து விழுந்தி சிரிக்க வைக்கிறது. நாயகி கீத்திகா திவாரி. முதல் பாதியில் ஒரு காட்சியில் வந்து போகிறார். இரண்டாம் பாதியில் பேயாக வந்து காமெடி காட்சிகளை கொஞ்சம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறார்.
கெளதம் வாசுதேவ் மேனன் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்ர். அவர் செய்யும் காமெடிகளை விட அவர் ஒந்த கதாபாத்திரத்தில் பார்க்கும்போது நமக்கு காமெடியாக இருக்கிறது. செல்வராகவன் ஹிட்ச்காக் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் குறை சொல்ல முடியாத ஒரு நடிப்பு. நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் மூவரும் சந்தானத்தின் குடும்பத்தினராக காஎம்டியிலும் ஸ்கோர் செய்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன் வழக்கம் போல காமெடியில் அதகளம் செய்திருக்கிறார். மாறன், ரெடின் கிங்ஸ்லி, பிக் பாஸ் வர்ஷினி மற்றும் பலரும் முடிந்தவரை நல்ல நடிப்பை தர முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆப்ரோ இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. கேட்கும் விதத்தில் இருந்தாலும் இந்துக்கள் மனதை புண்படுத்தியதால் நீக்கப்பட்ட கோவிந்தா பாடல் படத்துக்கு இழப்பு தான். பின்னணி இசை ஓகே ரகம். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. பரத் விக்ரமன் படத்தொகுப்பு குழப்பமான இந்த படத்தை நமக்கு ஓரளவு புரியும்படி தந்திருக்கிறது.
இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் காமெடி படத்தை கொஞ்சம் புதுமையான களத்தில் கொடுக்க முயற்சி எடுத்திருக்கிறார். படத்தின் பல ஐடியாக்கள் புதுமையாக, ரசிக்கும் விதத்திலேயே இருக்கிறது. முதல் பாதியில் தியேட்டரில் படத்துக்குள் சிக்கிக் கொள்ளும் கா மெடி காட்சிகள் நன்றாகவே இருக்கிறது. இரண்டாம் பாதியை கொஞ்சம் இழுத்த உணர்வு ஏற்படுகிறது. சினிமா விமர்சகர்களை பகடி செய்து எடுத்திருக்கும் இந்த படத்திலேயே சந்தானம் படம் நல்லா இருந்தா எந்த விமர்சனமும் எடுபடாது, நல்ல படம் ஓடும் என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். எந்த லாஜிக்கையும் பார்க்காமல் குடும்பத்துடன் ஜாலியாக பார்த்து விட்டு வரலாம் இந்த “டிடி நெக்ஸ்ட் லெவல்”.