தெலுங்கில் சின்ன பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய ளவில் கவனம் ஈர்த்த படம் தான் சினிமா பண்டி. ஆட்டோ ட்ரைவர் கண்டெடுக்கும் ஒரு கேமராவை வைத்து அவர்களுக்கு கிடைக்கும் விஷயங்களை வைத்து அந்த ஊர் மக்களே சினிமா எப்படி எடுக்கிறார்கள் என்பதை கலகலப்பாக, யதார்த்தமாக திரையில் காட்டியிருப்பார்கள். அப்படி ஒரு திரைப்படம் தமிழிலும் உருவாகி இருக்கிறது, அதிலும் வெறும் கற்பனை கதையாக அல்லாமல் தான் சினிமா எடுக்க பட்ட கஷ்டங்களையும், தன் சொந்த ஊரின் எளிய முகங்களை நடிக்க வைத்ததற்கான காரணத்தையும், படம் எடுக்க தொழில்நுட்ப கலைஞர்கள் இல்லாமல் தன் குடும்பம், நண்பர்களை வைத்து எடுத்ததையும் ஒரு சினிமாவாக திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சங்ககிரி ராச்குமார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி ஊடகங்கள் மற்றும் திரைத்துறையினரால் பாராட்டப்பட்ட ‘வெங்காயம்’ என்ற படத்தை தொடர்ந்து அவர் இயக்கியிருக்கும் அடுத்த படம் தான் ‘பயாஸ்கோப்’. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ளனர்.
படத்தின் கதைப்படி, சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் உதவியுடன் சங்ககிரி ராச்குமார் திரைப்படம் எடுத்த கலகலப்பான உண்மைக் கதை தான் இந்த பயாஸ்கோப். அத்துடன் இன்னொரு உண்மைக்கதையையும் இணைத்து 2 மணி நேர படமாக திரையில் தந்திருக்கிறார். எளிய மனிதர்கள் கைக்கு எட்டும் நிலைக்கு சினிமா வந்திருக்கிறது என்பதும் படத்தில் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும் செய்தி. அத்துடன் சினிமா எடுப்பது கூட எளிது, அதை வெளியிட்டு முதலீட்டை திரும்பப் பெறுவது என்பது மிகப்பெரிய சவால் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.
படம் முழுக்க தெரிந்த முகங்கள் என்று யாரும் இல்லை. எல்லாமே இயல்பான மண்ணின் மைந்தர்கள். இயக்குனர் மற்றும் கதையின் நாயகன் சங்ககிரி ராஜ்குமார் தொடங்கி சங்ககிரி மாணிக்கம், வெள்ளையம்மாள், முத்தாயி, சிறுவர்கள் என கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அத்தனை பேருமே புதுவரவுகள் தான். நடித்தார்கள் என சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த தாத்தா, பாட்டிகள் செய்யும் அலப்பறைகள் குபீர் ரகம். சத்யராஜ் மற்றும் சேரன் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் தோன்றுகிறார்கள். இந்த மாதிரி ஒரு எளிய படத்தில் தங்கள் பிரபல்யத்தை உபயோகித்துக் கொள்ள அனுமதி அளித்ததற்காகவே பாராட்டுக்கள்.
தாஜ்நூர் இசை படத்தின் தன்மைக்கே ஏற்ப நம்மை கதையுடன் ஒன்ற வைக்கிறது. முரளி கணேஷ் ஒளிப்பதிவு இருக்கிற விஷயங்களை வைத்து என்ன செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறது. அந்த சங்ககிரி கிராமங்களை மிக இயல்பாக காட்டியிருக்கிறது.
இயக்குனர் சங்ககிரி ராச்குமார் தனி ஒரு மனிதராக இந்த படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். நல்ல சினிமாக்களை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பும், கொள்கையும் படம் பார்க்கும்போதே தெரிகிறது. படம் தொழில்நுட்ப ரீதியில் எதையும் செய்யாமல் இருந்தாலும், உணர்வு ரீதியில் நம் மனதை ஆட்கொள்கிறது. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் திருமண மண்டப காட்சியில் கண்கள் கலங்க வைக்கிறார். சின்ன பட்ஜெட்டில் நல்ல ஒரு இயல்பான யதார்த்த சினிமாவை கொடுத்ததற்கும் அவருக்கும், அதை வெளிக்கொண்டு வர ஆதரவாக நிற்கும் ஆஹா மற்றும் ப்ரொடுயூசர் பஜாருக்கும் பாராட்டுக்கள்.