பிரபு நடித்த திருநெல்வேலி படத்தில் நடிகராக அறிமுகமான உதயா நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. திரைப்பயணத்தில் 25வது ஆண்டில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அக்யூஸ்ட்’. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கைதி படத்துக்கு பிறகு ஒரு கைதியும், போலீஸூம் பயணிக்கும் பின்னணியில் உருவாகியுள்ள ஆகஷன் படம். கைதி படத்தைப் போலவே பரபரப்பான ஆக்ஷன் படமாக அமைந்துள்ளதா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஒரு கொலைக் குற்றத்திற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதி உதயாவை சேலம் கோர்ட்டுக்கு அழைத்து செல்ல உத்தரவு வர, பணியில் இருக்கும் காவலர் அஜ்மல் மற்றும் சிலர் அவரை போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்கிறார்கள். வழியில் போலீஸ் வாகனம் பழுதாகி விட அரசுப் பேருந்தில் செல்கிறார்கள். உதயாவை கொலை செய்ய சிலர் முயற்சிக்க, அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார்கள். வழியில் சில போலீஸ் அதிகாரிகளும் கூட உதயாவை கொலை செய்யும் திட்டத்திற்கு துணை போகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பி, சேலம் சென்று சேர்ந்தார்களா? உதயாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினாரா அஜ்மல்? என்பதே மீதிக்கதை.
உதயா முழுக்க கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் முழுக்க அழுக்கு லுங்கி, சட்டை, தாடியுடன் ரொம்பவே லோக்கலான, எப்போதும் ரவுசாக சுற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் படம் என்றாலும் கதையை தாண்டாத ஆக்ஷன் மட்டுமே செய்திருக்கிறார். அவரது காதல் போர்ஷனும் ரசிக்க வைக்கிறது. நாயகியாக ஜான்விகா, கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் மிக அழகாக தமிழ் பெண்ணாக நடித்து நம்மை கவர்கிறார்.
உதயாவை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காவலராக அஜ்மல், தேர்ந்தெடுத்த நடிப்பு. ஆக்ஷன் காட்சிகளிலும், சேஸிங் காட்சிகளிலும் உதயாவை மீறாத அதே சமயம் கதைக்கு ஏற்ற ஆக்ஷனில் ஸ்கோர் செய்கிறார். யோகி பாபு வரும் காட்சிகளில் காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அவரின் கவுண்டர்கள் சிரிக்க வைக்கிறது. மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள் தாளம் பொட வைக்கின்றன. பின்னணி இசையில் அந்த தீம் மியூசிக் நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மருதநாயகம் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளிலும், அந்த பஸ் சேஸிங் காட்சியை படமாக்கிய விதமும் சிறப்பு.
இயக்குனர் பிரபு ஸஸ்ரீனிவாஸ், பரபரப்பான ஒரு ஆக்ஷன் திரில்லர் கதையை கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதில் பாதி வெற்றியையும் பெற்றிருக்கிறார். திரைக்கதையும் அதற்கு கைகொடுத்திருக்கிறது. படத்தின் ஹைலைட்டான ஆக்ஷன் காட்சியை படமாக்கிய விதமும், கதையில் ஆங்காங்கே திருப்புமுனை காட்சிகளை வைத்தும் ஸ்கோர் செய்திருக்கிறார். காதல், எமோஷன், காமெடி, ஆக்ஷன் என ஒரு கமெர்சியல் படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் வைத்து ஒரு பொழுதுபோக்கு படத்தை தந்திருக்கிறார்.