புதுமுகங்களை வைத்து நல்ல கதைகளே மட்டுமே நம்பி, அதையே மூலதனமாக வைத்து உருவாகும் படங்கள் பல நேரங்களில் அடடே என நம்மை ஆச்சர்யப்பட வைக்கும். அப்படி சின்ன பட்ஜெட்டில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து நல்ல ஒரு வித்தியாசமான களத்தில் உருவாகியிருக்கும் ஹாரர் திரில்லர் படம் தான் “எமகாதகி”. இப்படத்தின் டீசரே பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. கிராமத்து பின்னணியில் ஒரு இளம்பெண்ணின் மரணத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக்கி படத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகி ரூபா கொடவாயூர் சிறுவயதில் இருந்தே வீஸிங் என சொல்லப்படும் மூச்சுத்திணறல் பிரச்சினை உண்டு. அவரது அப்பா ஊர் தலைவர். ரூபா ரொம்பவே பிடிவாதக்காரி. ஒரு நாள் அவரது அப்பா கோபத்தில் மகளை அறைந்து விடுகிறார். அன்றிரவே ரூபா தன் அறையில் தூக்கில் பிணமாக தொங்குகிறார். தற்கொலை விஷயம் போலீஸுக்கு தெரிந்தால் போஸ்ட் மார்ட்டம் செய்து உடலை சிதைத்து விடுவார்கள் என சொல்லி அதை மறைத்து மூச்சுத் திணறலால் அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை பரப்பி, இறுதிச் சடங்கு வேலைகளை கவனிக்கிறார்கள். ஆனால் அந்த உடள் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறது. எவ்வளவோ முயற்சித்தும் அந்த உடலை வீட்டை விட்டு வெளியே எடுத்து வர முடியாமல் தவிக்கிறார்கள். என்ன காரணம்? ஏன் அவரது உடன் வெளியே வர மறுக்கிறது? அவர் ஏன் தூக்கில் தொங்கினார்? என பல கேள்விகளுக்கு விடை தான் இந்த எமகாதகி.
உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா , மிஸ்டர்.பிரக்னெண்ட் போன்ற தெலுங்கு படங்களில் நடித்த நடிகை ரூபா கொடவாயூர் தான் கதையின் நாயகி. ஒரு கிராமத்து தமிழ்ப் பெண் போல ரூபா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஃபிளாஷ்பேக் காட்சிகளில் பல இடங்களில் நடிகை இஷா ரெப்பாவை நியாபகப்படுத்துகிறார். இறுதிச் சடங்கு காட்சிகளில் எல்லாம் நடிக்காமல், அந்த தோற்றத்திலேயே ஆளுமை செலுத்துகிறார். படத்தில் தெரிந்த ஒரே முகம் என்றால் அது நாயகியின் அம்மாவாக நடித்த நடிகை கீதா கைலாசம் தான். அவரை ஏன் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் என்பதற்கு அந்த கிளைமாக்ஸ் காட்சி ஒன்றே சான்று. இவர்களுடன் பிளாக்ஷீப் புகழ் நரேந்திர பிரசாத், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா மற்றும் சில குணச்சித்திர நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். அந்த ஊரின் மனிதர்களை பிரதிபலிக்கும் அசல் முகங்களாக தெரிகிறார்கள்.
சுஜித் சாரங் ஒளிப்பதிவில் அந்த கிராமத்தை அப்படியே ஒரு விசிட் செய்தது போன்ற உணர்வு. குறிப்பாக நாயகியின் வீட்டை காட்சிப்படுத்திய விதம் அவ்வளவு இயல்பு, சிறப்பு. டாப் ஆங்கிள் காட்சிகளில் கிராமத்தை காட்டிய விதமும் அழகு. ஜெசின் ஜார்ஜ் படத்துக்கு தேவையான இசையை மிகச்சிறப்பாக கொடுத்துள்ளார். குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பின்னணி இசை நமக்கு நல்ல ஒரு அனுபவத்தை வழங்குகிறது.
இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் எடுத்துக் கொண்ட களமே கொஞ்சம் புதுசு. அதை மிக அழகாக திரைக்கதை அமைத்து நல்ல ஒரு திரை அனுபவத்தை வழங்கியிருக்கிறார். ராஜேந்திரன் எழுதிய வசனங்களும் அதற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றன. இப்படி ஒரு கதையை சொல்லி ஒரு நாயகியை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்திருப்பதே அவரின் முதல் வெற்றி. அதை எந்த வித சலிப்பும் இல்லாமல் சீட் நுனியில் ரசிகர்களை அமர வைத்து பார்க்க வைத்தது அடுத்த வெற்றி. மனிதர்களின் போலி முகங்களையும், அவர்களின் நிமிடத்திற்கு நிமிடம் மாறும் பச்சோந்தித் தனத்தையும் காட்சிகளினூடே காட்டியிருப்பதும் நல்ல ஒரு முயற்சி. மொத்தத்தில் சின்ன பட்ஜெட்டில், நல்ல ஒரு கான்செப்டை நேர்த்தியாக சொன்ன விதத்தில் வெற்றியை பெற்றிருக்கிறது இந்த “எமகாதகி”!.