விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி நடிக்க அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுளள படம் தான் “ரோமியோ”. விஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ள இந்த படத்துக்கு பரத் தனசேகர் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதைப்படி, 35 வயதாகியும் காதல் உணர்வு வராமல் திருமணம் செய்ய மாட்டேண் என பிடிவாதமாக இருக்கும் விஜய் ஆண்டனிக்கும், மிர்ணாளினி ரவிக்கும் ஒரு கட்டத்தில் திருமணம் நடக்கிறது. திருமணம் மிர்ணாளினிக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததை உணர்ந்து கொள்கிறார் விஜய் ஆண்டனி. சினிமாவில் நடிகையாக சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மிர்ணாளினி, விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தது தவறு, தனக்கு விவாகரத்து வேண்டும் எனக் கூற, அவரின் எண்ணத்தை புரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி, மிர்ணாளினிக்கு பிடித்த மாதிரி தன்னை மாற்ற என்னவெல்லாம் செய்கிறார் என்பதே மீதிக்கதை.
விஜய் ஆண்டனியின் கேரியரில் அவர் நடித்தது பெரும்பாலும் சீரியஸான கதையம்சம் உள்ள படங்கள் தான். ஆனால் ஒரு மாற்றமாக இந்த ரோமியோ படத்தில் மாறுபட்ட விஜய் ஆண்டனியாக நடிப்பில் புது பரிமாணத்தை காட்டுகிறார். காமெடி காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
நாயகி மிர்ணாளினி ரவி தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தன் நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள யோகிபாபு, விடிவி கணேஷ், ஷாரா ஆகியோரும் தங்கள் பங்குக்கு வந்து ரகளையாக கலக்கி விட்டுப் போயிருக்கிறார்கள்.
படத்தில் ஒளிப்பதிவு அருமை, தனக்கு கொடுக்கப்பட்ட பட்ஜெட்டிலும் தன்னால் முடிந்த சிறப்பான விஷூவலை கொடுத்திருக்கிறார். பரத் தனசேகர் பின்னணி இசை ஓகே ரகம், ஆனால் அவர் இசையில் பாடல்கள் அவ்வளவாக ஒட்டவில்லை. டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும் என காதல் பாடல்களை அள்ளித் தெளித்த விஜய் ஆண்டனி அவர் நடிக்கும் படங்களுக்கும் இசையமைத்தால் அதுவே படத்துக்கும் மிகப்பெரிய பலமாக அமையும். அவரின் காதல், துள்ளல் பாடல்களை கேட்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவருக்கு யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.
அறிமுக இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் முதல் படத்திலேயே நல்ல நடிகர்கள், நல்ல பட்ஜெட் என கிடைத்ததை வைத்து ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்துள்ளார். அடுத்து என்ன நடக்கும் என யூகிக்கக் கூடிய வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. விஜய் ஆண்டனியின் கதாபாத்திர தன்மைக்கு முரணாக படத்தின் தலைப்பு ரோமியோ என இருக்கிறதே எனவும் எண்ண வைக்கிறது. ஆங்காங்கே வரும் பாடல்கள் படத்தின் வேகத்தை குறைக்கிகிறது. அதனை கொஞ்சம் சரி செய்திருக்கலாம். மொத்தத்தில் எந்த வித முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளும் இல்லை என்பது ஆறுதல். இந்த கோடை விடுமுறையில் குடும்பத்துடன் தாராளமாக சென்று ரசிக்கலாம்.