சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “வேட்டையன்”. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் இந்த படத்தின் சாதக, பாதகங்களை அலசும் ஒரு SWOT Analysis கட்டுரையை இந்த பதிவில் பார்ப்போம்.
Strengths:
1) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ட்ரைலர்ல பார்க்குறப்போவே முந்தைய படங்ளை விட கொஞ்சம் இளமையா இருக்காரு. ஆக்ஷனும் இருக்குனு சொல்லிருக்காங்க. அதோட முள்ளும் மலரும் மாதிரி நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்குற கதாபாத்திரம்னு இயக்குனர் சொல்லிருக்காரு. ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டா அமையும்னு நம்பலாம். அனைத்து தரப்பு மக்களையும் கவரும் கமெர்சியல் படமாக இருக்குமா என்பதை பொறுத்தே வெற்றி அமையும்.
2) மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம். அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா, ரித்திகா, அபிராமி, ரோஹிணி, கிஷோர் மற்றும் பல நடிகர்கள் இந்த படத்துல இருக்காங்க. எந்த ஒரு சீன் எடுத்தாலும் தெரிந்த முகங்கள் தான் இருப்பாங்க. அப்படி காட்சிக்கு காட்சி ரசிகர்களை கட்டிப் போடும் திறமை இவர்களுக்கு உண்டு. அதை நல்ல எண்டர்டெயின்மெண்ட் கலந்து கொடுத்திருந்தால் பெரிய வெற்றியை அடையும் வாய்ப்பு உண்டு.
3) கடந்த பல வருடங்களாகவே ரஜினி படங்கள் மட்டுமின்றி பெரும்பாலான பெரிய ஹீரோக்களின் படங்கள் செட்டிலும், ஸ்டுடியோவிலும் எடுக்கப்பட்டது, அது பல நேரம் செயற்கையாகவே அமைந்து வந்தது. ஜெயிலரில் நெல்சன் பல ஊர்களுக்கும் அழைத்யு சென்று ரஜினியை வைத்து படம் எடுத்தார். அது கொஞ்சம் ஃபிரெஷாகவும் இருந்தது. இந்த வேட்டையன் படத்தையும் கேரளா, நாகர்கோவில், கடப்பா, மும்பை, ஹைதராபாத் என அந்தந்த இடங்களுக்கே அழைத்து சென்று படம் பிடித்திருக்கிறார் ஞானவேல். அது படத்தை கொஞ்சம் ரசிக்க வைக்கும் என நம்பலாம்.
4) ட்ரைலரில் பார்த்த வரை விஷூவல்ஸ் ரொம்ப நல்லாவே இருக்கு. எஸ்.ஆர்.கதிர் புது விதமாக ரஜினியை காட்டியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் கேமரா புகுந்து விளையாடியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
5) அனிருத். மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம். ஏற்கனவே அனிருத் போட்ட மனசிலாயோ, ஹண்டர் வண்டார் பாடல்கள் செம்ம ரீச். எல்லா ரசிகர்களிடம் பெரிய அளவில் சென்று சேர்ந்திருக்கிறது. இன்றைய தலைமுறையினர் மத்தியில் படத்தை சிறப்பாக கொண்டு போய் சேர்த்திருக்கிறது. பின்னணி இசை வழக்கமான விக்ரம், ஜெயிலர், லியோ, தேவரா படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்று சொல்லியிருகிறார்கள். அது எப்படி இருக்கும் என்பதை காண கண்டிப்பாக ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்பது உறுதி.
6) ஜெய் பீம் என்ற மிகச்சிறந்த படத்தை கொடுத்த ஞானவேல் படம் என்பது கூடுதல் மதிப்பு. எப்படியும் நல்ல படம் என்ற பெயரை பெறும் என்பது உறுதி. கண்டெண்ட் படம் என்றே மார்க்கெட் செய்கிறார்கள். அதனால் ரசிகர்களும் அதே மனநிலையில் செல்வார்கள் என்பதும் கூடுதல் பலம்.
Weakness:
1) படத்தின் பாஸிடிவ் அம்சமாக சொன்ன ரஜினி, ஞானவேல் கூட்டணியே தான் நெகடிவ்வும் கூட. ஜெயிலர் போன்ற படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் செல்லும்போது ஒரு சமூக, அரசியல் விஷயங்களை ஆழமாக பேசும்போது ரசிகர்களை திருப்தி செய்வது மிகவும் கடினம். மாஸ் காட்சிகளை எதிர்பார்க்கும் ரசிகர்களை திருப்திப்படுத்துவது என்பது ஒரு மிகப்பெரிய சவால். அதை ஞானவேல் எப்படி செய்திருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
2) நிறைய நட்சத்திரங்கள் இருப்பது எந்தளவுக்கு பாஸிடிவான விஷயமோ அதே அளவுக்கு நெகடிவாகவும் அமையலாம். உதாரணமாக அமிதாப் பச்சன் இத்தனை வருட சினிமா கேரியரில் அவர் நடிக்கும் முதல் தமிழ் படம். அப்படி என்ன இருக்குனு வேட்டையனில் நடித்திருக்கிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அவர் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட வேண்டும். அதே போல ஃபகத் பாசில் கதாபாத்திரமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், இல்லையெனில் பல ரசிகர்கள் ஏமாந்து போய், அதையே நெகடிவ்வாக சொல்லும் வாய்ப்பு இருக்கிறது.
3) ஜெயிலர் மாதிரி இல்லையே, இசையும் நார்மலா இருக்கே என ட்ரைலருக்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. ஆனாலும் கண்டெண்ட் படம் என்று சொல்லி ரசிகர்கள் ஓரளவு சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாஸ் படமாக இல்லாமல் போனால் அதை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை பொறுத்தே வெற்றி அமையும்.
4) படத்தின் நீளம் 2:45 மணி நேரம். பரபரப்பான திரைக்கதை அவசியம். அப்படி கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரசிகர்களை கட்டிப்போடா வைக்கும் திரைக்கதை அமைந்திருக்கிறதா? என்பது முக்கியம்.
Oppurtunities:
1) ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருப்பதுடன், படமும் சிறப்பாக நல்ல பொழுதுபோக்கு படமாக அமைந்து விட்டால் நிச்சயம் 400,500 கோடிகளை கூட வசூலிக்க வாய்ப்பு உண்டு. இந்தியில் கிளிக் ஆனால் கண்டிபபக பெரிய வசூல் சாத்தியம். ஆனாலும் படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கப் போகிறது? அதை தாண்டி எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2) முதல் நாள் வேலை நாள். அடுத்த மூன்று நாட்கள் ஆயுத பூஜை விடுமுறை. நல்ல ரிப்போர்ட் வரும் பட்சத்தில் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும். தீபாவளி வரை ஓடி பெரிய வசூலை அள்ளலாம்.
3) படம் வெற்றி பெற்றால் நல்ல கருத்துக்களை கொண்ட சமூக படங்கள் வர வழி வகுக்கும். பெரிய ஹீரோக்களும் தொடர்ந்து இந்த மாதிரி படங்களில் நடிக்க முன் வருவர். ரஜினியே இந்த மாதிரி படங்களிலும் அடுத்தடுத்து நடிப்பார். இல்லையெனில் ஜெயிலர், கூலி போன்ற மாஸ் ஆக்ஷன் படங்களில் தான் கவனம் செலுத்துவார்.
Threats:
1) இந்தியில் அதே நாளில் சூர்யா நடித்த ஜிக்ரா என்ற ஆலியா பட் நடித்த படம் வருவது இந்தியில் வசூலில் சிறு பாதிப்பை ஏற்படுத்தலாம். தேவரா படம் இந்தி, தெலுங்கிலும் ஓரளவு ஓடிக் கொண்டிருப்பதும் வேட்டையனுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.
2) கபாலி, காலா போன்ற படங்களை போல முழுக்க அரசாங்கம், போராட்டம், மனித உரிமை என கருத்துக்கள் மட்டுமே பேசினால் அது படத்தின் ஓட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும். ரஜினி படத்துக்கே உரித்தான கமெர்சியல் அம்சங்கள், மாஸ் காட்சிகள் இருக்க வேண்டியது அவசியம்.