பாட்ஷா ஃபார்முலாவில் ஒரு வித்தியாசமான ஆக்ஷன் கதை இந்த படம் – SJ சூர்யா!

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தமிழ் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, எஸ். ஜே. சூர்யா, நடிகைகள் பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை அபிராமி பேசும்போது, “இந்தப் படத்தில் மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்திலும் நிறைய பாசிட்டிவிட்டி இருந்தது. நானியை ஈயாக பார்த்திருக்கிறோம். புராண கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து பரிட்சார்த்த முறையில் நடித்து வரும் திறமைசாலி.‌ இயக்குநரும் , நடிகருமான எஸ். ஜே. சூர்யாவிடம் ஒரு மேஜிக் இருக்கிறது.‌ அது இந்த படத்திலும் இருக்கிறது. இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து பெருமிதம் அடைகிறேன். இயக்குநர் விவேக்- இந்த படத்தில் நாயகனுக்கு அழகான அம்மா கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியிருக்கிறார்.‌ திறமையான இயக்குநர். கலைஞர்களிடமிருந்து கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அந்த நடிப்பை திறமையாக வாங்கி விடுவார். அனைவரும் ஒன்றிணைந்து ரசிக்கும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறோம். ஆகஸ்ட் 29-ஆம் தேதியன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் எஸ். ஜே. சூர்யா பேசும்போது, “நானியை முதலில் வரவேற்கிறேன். அவர் ஏற்கனவே தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் என்றாலும் அவரை மீண்டும் மனதார வரவேற்கிறேன். இங்கு உள்ள குடும்ப ரசிகர்கள் அனைவருக்கும் நானி பரிச்சயமானவர். பெருந்தன்மையானவர். அற்புதமான நடிகர். தெலுங்கில் அவருக்கு ‘நேச்சுரல் ஸ்டார்’ என பட்டம் வழங்கி இருக்கிறார்கள். ‘விருமாண்டி’ படத்தில் நடித்து பிரபலமான அபிராமி சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அனைத்துக்கும் நேரம் என்று ஒன்று இருக்கிறது. அது வந்து விட்டால்… வாய்ப்புகள் குவியத் தொடங்கும் அது போல் தற்போது அபிராமிக்கு நடந்து கொண்டிருக்கிறது. நிறைய படங்களில் நடித்து வருகிறார். இதற்காக அவருக்கு மனமார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா- தெலுங்குகாரராக இருந்தாலும் சென்னையில் படித்த பையன். அதனால் அவர் சென்னை வாசி தான். அவருக்கு தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா- அபிராமி- பிரியங்கா மோகன் -அதிதி பாலன் -என தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். நானி சாரும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான். நானி சார் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை உதவி இயக்குநராக தொடங்கி.. படிப்படியாக உயர்ந்து இன்று நட்சத்திர நடிகராக வளர்ந்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களிடம் ஏராளமான அன்பை சம்பாதித்து இருக்கும் ஒரு நட்சத்திர நடிகர்.‌ தமிழ்நாட்டிலும் அவர் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வருகிறார். எஸ் ஜே சூர்யா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறார் என்றால்.. அந்தத் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அண்மையில் ‘ராயன்’ வெளியானது. பெரும் வெற்றியை பெற்றது. எனக்கும் நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படம் வெளியாகிறது.‌

நான் ஏன் இந்த படத்தை ராயனுடன் ஒப்பிட்டு பேசுகிறேன் என்றால்.. அந்தப் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் ஒரு வித்தியாசமான திரைக்கதை இருக்கிறது. இதுவரை பல ஆக்ஷன் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அனைத்திற்கும் அடிப்படை மாணிக்கம்- பாட்ஷா தான். இதை வைத்து தான் அனைத்து ஆக்சன் படங்களும் உருவாகின்றன. மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாகுபலி’ படத்திலும் இந்த அடிப்படை தான் இருந்தது. அதாவது பாட்ஷாவாக இருப்பார். ஆனால் சூழ்நிலைக்காக தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மாணிக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பார். இது எப்போதும் வெற்றி பெறும் சினிமா சூத்திரம். இந்த தருணத்தில் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இந்த ஃபார்முலாவில் வித்தியாசத்தை புகுத்தி இருக்கிறார். அது என்னவெனில் ஒரு பையன் அதீத கோபக்காரன். அவனது அம்மா ‘கோபப்படாதே’ என்று சொன்னால் அவன் கேட்பதாக இல்லை. அதனால் அவனது தாயார், ‘நீ கோபப்படு.‌ அதனை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோபப்படாதே. வாரத்திற்கு ஏதேனும் ஒரு நாள் மட்டும் கோபப்படு’ என சொல்கிறார். அது என்ன கிழமை என்றால் சனிக்கிழமை அது ஏன் என்பதற்கு நீங்கள் படத்தை பார்த்தால் புரியும். அதனால் இந்த படத்தில் கதையின் நாயகனான சூர்யா ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கோபமே படாமல் இயல்பான மனிதனாக இருப்பார். அதாவது மாணிக்கமாக இருப்பார். சனிக்கிழமை மட்டும் அவர் பாட்ஷாவாக மாறுவார். இதுதான் இந்தப் படத்தின் கான்செப்ட்.

இது ஹீரோவின் கோபத்தை உணர்த்துகிறது. அதே போல் இந்த படத்தில் தயா எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். எனக்கும் ஒரு கோபம் இருக்கிறது. எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விசயம் கிடைக்காததால் நான் அரக்கத்தனமாக நடந்து கொள்கிறேன். இந்த இரண்டு கோபமும் ஒரு புள்ளியில் மோதினால் … என்ன நடக்கும் என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். இதனை இயக்குநர் விவேக் ஆத்ரேயா நேர்த்தியாகவும் அழகாகவும் அற்புதமாகவும் திரையில் செதுக்கியிருக்கிறார். கடந்த காலங்களில் நாகார்ஜூனா நடிப்பில் தமிழகத்தில் வெளியான ‘உதயம்’ படத்திற்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ… அது போன்றதொரு வித்தியாசமான அனைத்து ரசிகர்களையும் கவரக்கூடிய படம்தான் இது. அதனால்தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகிறது. இந்தப் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *