சமுத்திரகனி, தம்பி ராமையா என்ற வெற்றிக் கூட்டணி ஏற்கனவே அப்பா, விநோதய சித்தம் படங்களை தொடர்ந்து மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் “ராஜாகிளி”. இந்த முறை படத்தை இயக்கியிருப்பவர் சமுத்திரகனி அல்ல, தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா. நடிகராக அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் உமாபதி இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் இது. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். உமாபதி ராமையா இந்த படத்தின் மூலம் இயக்குனராக ஜொலித்தாரா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, அன்பாலயம் என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி பல பேரை அரவணைத்து வருகிறார் சமுத்திரகனி. ஒரு நாள் தெருவில் குப்பைத்தொட்டியில் கிடக்கும் உணமை எடுத்து சாப்பிடும் பிச்சைக்காரரான தம்பி ராமையாவை பார்க்கிறார். அவரை தன் ஆசிரமத்துக்கு அழைத்து சென்று, முடி வெட்டி நல்ல உடை கொடுத்து தங்க வைக்கிறார். எதேச்சையாக அவர் அழுக்கு மூட்டையில் ஒரு டைரி கிடைக்க, அதில் தம்பி ராமையா பின்னணி தெரிகிறது. தமிழ் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் முருகப்பா. தீவிர முருக பக்தர். கடும் உழைப்பால் லாரி கிளீனராக இருந்து இந்த நிலைக்கு வந்திருப்பவர். அவர் வேலை பிஸியில் வீட்டுக்கு வந்து தன்னுடன் நேரம் செலவிடாததால் அவர் பெண் விஷயத்தில் மோசமாக இருப்பார் என நினைக்கிறார் அவர் மனைவி. அப்படிப்பட்ட சூழலில் சில காரணங்களால் 50+ வயதான தம்பி ராமையாவுக்கு இரு பெண்களுடன் உறவு ஏற்படுகிறது. அதன் பின் அவர் வாழ்வில் என்ன நடந்தது? அவர் எப்படி பிச்சைக்காரராக அலையும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது மீதிக்கதை.
தம்பி ராமையா முருகப்பா என்ற கதாபாத்திரத்தில் தன் நவரச நடிப்பால் நம் மனதில் நிற்கிறார். எம்.ஆர்.ராதாவுக்கு ஒரு ரத்தக் கண்ணீர் போல தம்பி ராமையாவுக்கு இந்த படத்தை சொல்லலாம். கதையில் அப்படிப்பட்ட சில மாற்றங்கள் இருக்கும். நகைச்சுவை, செண்டிமெண்ட் என நம்மை ரசிக்க வைக்கிறார். ஒரு சில காட்சிகளில் கண் கலங்க வைத்திருக்கிறார். சமுத்திரகனி முந்தைய படங்களை போல அல்லாமல் இதில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். மிக கண்ணியமான, சமுத்திரகனிக்கே பொருத்தமான கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். ‘ஆடுகளம்’ நரேன், பழ.கருப்பையா, ரேஷ்மா பசுபுலேட்டி, தீபா ஷங்கர், அருள் தாஸ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை மிகச்சிறப்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். ஒரு முக்கியமான காட்சியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே நடித்திருக்கிறார்.
கேதார்நாத் மற்றும் எஸ். கோபிநாத் ஒளிப்பதிவு படத்துக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறது. இசையமைப்பாளராகவும் நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் தம்பி ராமையா. பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் படத்தோடு பார்க்கும்போது நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது. பின்னணி இசையிலும் முடிந்த வரை நல்ல பங்களிப்பையே கொடுத்துள்ளார்.
தம்பி ராமையா கதை, வசனம் எழுத, உமாபதி ராமையா திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். இயக்குனராக முதல் படம் என்றாலும் பெரிதாக குறைகள் அவ்வளவாக இல்லை. தம்பி ராமையாவின் வசனங்கள் பல இடங்களில் ரசிக்கும் படி அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மிக பிரபலமான ஒரு தொழிலதிபரின் வாழ்வில் நடந்த விஷயங்களை சினிமாவுக்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்து கதையாக எழுதியிருக்கிறார் தம்பி ராமையா. அதை மனதில் வைத்து பார்க்கும் ரசிகனுக்கு எது உண்மை, எது கற்பனை என்ற குழப்பம் எழுவது நிச்சயம். ஆனால் வெறும் கற்பனை கதையாக நினைத்து பார்த்தால் ரசிக்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக கண்டிப்பாக இருக்கும் இந்த “ராஜாகிளி”.