8 தோட்டாக்கள், ஜீவி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த வெற்றி நடித்துள்ள புதிய படம் ‘பகலறியான்’. நாயகியாக அக்ஷயா கந்தமுதன் மற்றும் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இந்த படத்தை முருகன் இயக்கியுள்ளார். ரிஷிகேஷ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மே 24ஆம் தேதி வெளியாகிறது. விவேக் சரோ இசை அமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் முருகன் பேசும்போது, “வெற்றி கதை கேட்கும் விதம் எல்லோருக்கும் தெரியும், அவரை கன்வின்ஸ் செய்தது தான் என் முதல் வெற்றி. அவர் அளித்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது. நாயகி அக்ஷயா இந்த படத்தில் நடிக்கும்போது புதுமுகம் தான். இப்போ விஜய் டிவியில் கலக்கு கலக்குனு கலக்கிட்டு இருக்கார். இசையமைப்பாளர் விவேக் சரோ எனக்கு கிடைத்த அனிருத். படம் பார்க்காமலே படத்தை ரிலீஸ் செய்றேன் என சொன்ன காசிநாதன் சாருக்கு ரொம்ப நன்றி” என்றார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “சினிமாவில் இருக்கிறவர்களை வாழ வைக்க வேண்டியது நம் கடமை. ரொம்ப் சிரமப்பட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறோம் என்றார்கள், கஷ்டப்பட்டா தான் சினிமா எடுக்க முடியும். வேதனையை தாண்டி படத்தை முடித்தால் ரிலீஸ் செய்வது அடுத்த சோதனை, ரிலீஸூக்கு பின் இன்னொரு சோதனை இருக்கு, நல்லா இல்லைனா கிழிகிழினு கிழிப்பாங்க. இதையெல்லாம் தாங்கிக் கொள்பவர்கள் தான் சினிமாவில் ஜெயிக்க முடியும். ஹீரோ வெற்றி நல்ல திறமையான, தன்னம்பிக்கையுள்ள நடிகர். பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் ஓடுற குதிரை மேல சவாரி செய்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெற்றி தேர்ந்தெடுக்கிற கதைகள் எல்லாம் வித்தியாசமானவை. அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். மிகச்சிறந்த நடிகனை தமிழ் சினிமா கண்டிருக்கிறது என்பதற்கு இங்கு பார்த்த ஒரு காட்சியே சான்று. சமூக வலைத்தளங்களில் வரும் ஆபாச ரீல்ஸ்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கணும்” என்றார்.
இயக்குனர் சுப்ரமணிய சிவா பேசும்போது, “இந்த குழுவில் யாரையுமே எனக்கு தெரியாது. ஒரு நண்பர் சொன்னதை வைத்து மரியாதை நிமித்தமாக இயக்குனர் முருகனை சந்தித்தேன். 15 வருடமாக நடிகனாக முயற்சி செய்து அது நடக்காததால், தானே நடித்து தயாரித்து இயக்கியிருக்கிறார் முருகன். ஜாக்கி சான், சில்வெஸ்டர் ஸ்டாலோன் என தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும் கலைஞர்கள் பலர் உண்டு. நடிகர் வெற்றியை எப்படி புடிச்சீங்க என்பது தான் எனக்கு ஆச்சர்யமாக இருந்த்து. அவர் கதையை கேட்டு பிடித்தால் தான் நடிப்பார். நாயகி கண்ணீருக்காகவாவது கண்டிப்பாக படம் வெற்றி அடையும். புதிய தலைமுறை தான் எப்போதுமே மாற்றத்தை கொண்டு வரும். அப்படி இந்த படம் நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என நம்புகிறேன். இப்போதெல்லாம் ரவுடிகளை ஹீரோவாக்கி படம் எடுக்கிறார்கள். அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. ஹீரோவை ரவுடியாக வைத்து முதன்முதலில் படம் எடுத்தது உலக அளவில் மார்ட்டின் ஸ்கோர்செசி தான்” என்றார்.
நடிகர் வெற்றி பேசும்போது, “இந்த படம் முழுக்க முழுக்க இரவில் நடக்கும் கதை. ஒரு காட்சி மட்டும் பகலில் இருக்கும். இயக்குனர் முருகன் பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார். முதல் நாளே இந்த டீம் ஒரு பயங்கரமான டீம் என்பது தெரிந்தது” என்றார்.
இயக்குனர் பேரரசு பேசும்போது, “இயக்குனர் முருகன். முருகன் என்றாலே பயமறியான். எடுத்திருக்கும் படம் பகலறியான். இன்றைய தலைமுறை பகலையே பார்ப்பதில்லை, உச்சி வெயிலுக்கு தான் எழுகிறார்கள். சினிமாவில் இசையமைப்பாளர்கள் தான் அந்த பகலறியான். தலைப்பிலேயே தெரிகிறது படம் முழுக்க இரவில் நடக்கும் கதை என்று. இந்த படத்தின் இசை நன்றாக இருந்தது. பெண்களின் கண்ணீர் மதிப்பை அளவிட முடியாது. இந்த படத்தின் மீது நாயகி வைத்த காதல் தான் அவர் விட்ட கண்ணீர். சோனியா அகர்வால் போலவே இருக்கிறார், இவரும் அவரை போலவே பெரிய உயரத்துக்கு போக வேண்டும். கவின் சினிமாவிலேயே இருந்து ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார். அப்படி வெற்றியும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த படத்தில் கதை எழுதியவர் ஒருவர், இயக்கம் ஒருவர் என பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் சினிமாவிலும் இன்னொருவர் கதையை வாங்கி படம் பண்ணும் நிலை வரணும்” என்றார்.
இந்த விழாவில் நடிகை அக்ஷயா கந்தமுதன், வினுப்பிரியா, கோபி கருணாநிதி, ஒளிப்பதிவாளர் அபிலாஷ், இசையமைப்பாளர் விவேக் சரோ, விக்கி ஃபிலிம்ஸ் காசிநாதன், சடையாண்டி, கருப்பசாமி, ரஜினி ரமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.