டிராகன் – விமர்சனம்!

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிராகன்’. அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிக்க, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரதீப்பின் முந்தைய பிளாக்பஸ்டர் படமான லவ் டுடேவை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லவ் டுடே போலவே இந்த படமும் பிரதீப்புக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை தந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பள்ளியில் 96% மதிப்பெண் எடுத்து கோல்ட் மெடல் வாங்கும் பிரதீப் தனக்கு பிடித்த பெண்ணிடம் காதலை சொல்ல, அவளோ தனக்கு பேட் பாய் தான் பிடிக்கும், அவங்க தான் கெத்து என சொல்லி விடுகிறார். அதனால் மனமுடைந்த பிரதீப் கல்லூரியில் படிப்பில் கவனம் செலுத்தாமல், ஒரு பேட் பாயாக டிராகன் என்ற பெயரில் ரவுடி பையனாக கெத்தாக சுற்றி 48 அரியர் வைக்கிறார். அந்த கல்லூரிக்கு வரும் புது மாணவர்களுக்கு இவரை ஒரு முன்னுதாரணமாக காட்டி இவனை போல ஆகி விடாதீர்கள் என பாடம் எடுக்கிறார் பிரின்ஸ்பால் மிஷ்கின். அந்த அளவுக்கு மோசமான மாணவரான பிரதீப்பின் காதலி அனுபமா பரமேஸ்வரன், ஒரு கட்டத்தில் காதலை முறித்துக் கொண்டு வேறொருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் அனுபமாவின் கணவரை விட குறைந்தது ஒரு ரூபாய் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் போலிச் சான்றிதழ் வைத்து ஒரு பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து கடுமையாக உழைத்து செட்டில் ஆகும் நிலைக்கு வருகிறார். இன்னொரு நாயகி கயாடு லோகர் உடன் திருமணமும் நிச்சயம் ஆகிறது. இந்த சூழலில் அவர் செய்த ஏமாற்று வேலை மிஷ்கினுக்கு தெரிய வருகிறது. இந்த சிக்கலில் இருந்து பிரதீப் எப்படி மீண்டார்? தன்னை சுற்றி இருந்தவர்களுக்கு மத்தியில் தன்னுடைய பெயரை தக்க வைத்துக் கொண்டாரா? வேலை என்ன ஆனது? திருமணம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

நாயகன் பிரதீப் முதல் படமான லவ் டுடேயின் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டார். இந்த படத்தில் அவரது நடிப்பில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம். நடிப்பதற்கு மிகப்பெரிய ஸ்கோப் உள்ள ஒரு கதாபாத்திரம். நன்றாக நடித்திருக்கிறார். எரிச்சலூட்டும் ட்ராகன் கதாபாத்திரத்திலும் சரி, மெச்சூர்டான ராகவன் கதாபாத்திரத்திலும் சரி, நல்ல நடிப்பை தந்து அப்ளாஸை அள்ளுகிறார். அடுத்தடுத்த படங்களின் வெற்றி பிரதீப்பை மிகப்பெரிய இடத்தில் கொண்டு வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நாயகிகளாக அனுபமா பரமேஷ்வரன், இரு வேறு பரிமாணங்களில் வந்து கதையில் முக்கிய பங்கு வகிக்கிறார். நல்ல நடிப்பையும் தந்திருக்கிறார். கயாடு லோஹர் அழகான நாயகியாக வந்து ரசிக்க வைக்கிறார். தன்னுடைய கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை.

மிஷ்கின் வரும் ஒவ்வொரு காட்சியுமே படத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி செல்கிறது. அவர் வரும் ஒவ்வொரு காட்சியுமே படத்தின் மிக முக்கியமான காட்சிகள் தான். கௌதம் வாசுதேவ் மேனனுக்கு டெய்லர் மேட் என்று சொல்லும் விதமான கதாபாத்திரம். மரியம் ஜார்ஜ், இந்துமதி  ஆகியோர் படத்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம். கே.எஸ்.ரவிகுமார் நல்ல ஒரு கதாபாத்திரத்தில் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். விஜே சித்து, ஹர்ஷத், மணி என நண்பர்களாக நடித்தவர்களும் அப்ளாஸை அள்ளுகிறார்கள்.

இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கல் சிறப்பு என்றால் பின்னணி இசை மிகச்சிறப்பு. மிக முக்கியமான காட்சிகளில் எல்லாம் தெறிக்க விட்டிருக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு நல்ல ஒரு பொழுதுபோக்கு படத்துக்கு உண்டான ஒளிப்பதிவு. கலர்ஃபுல்லாக, ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. பிரதீப் இ ராகவின் படத்தொகுப்பு படத்துக்கு கூடுதல் பலம்.

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முதல் படம் “ஓ மை கடவுளே”வில் நல்ல ஒரு ஃபீல்குட் காதல் கதையை சொல்லியிருந்தார். இந்த படத்தில் ஒரு முழு கமெர்சியல் இயக்குனராக உருவெடுத்திருக்கிறார். காதல், காமெடி, ஆக்ஷன், எமோஷன், பாடல்கள் என அனைத்து அம்சங்களையும் மிகச்சிறப்பாக கையாண்டு படத்துக்கு அடிநாதமான தான் சொல்ல வந்த கருத்தையும் மிக அழகாக சொல்லியிருகிறார். ரசிகர்களை ஒரு நொடி கூட போரடிக்காமல் கட்டிப் போட்டதோடு நல்ல ஒரு கருத்தை பொழுதுபோக்கு அம்சங்களோடு தந்து நம்மை மெய்மறக்கச் செய்கிறார். பல காட்சிகளில் கண் கலங்க வைப்பதோடு இளைஞர்களுக்கு நல்ல ஒரு உத்வேகத்தையும், ஒரு நிறைவான மனதுடன் வெளியே அனுப்பி வைக்கிறார். குடும்பத்துடன் சென்று பார்க்க மிகச்சிறந்த ஒரு படம் இந்த “டிராகன்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *