அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்கு பிறகு மார்வெல் தயாரிப்பில் வெளியான சமீபத்திய சில படங்கள் எதுவும் அவர்கள் நினைத்த வெற்றியை அடையவில்லை. இப்படிப்பட்ட மிகவும் இக்கட்டான சூழலில் ரசிகர்களால் மட்டுமின்றி மார்வெலாலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக ‘டெட்பூல் & வால்வரின்’ (Deadpool & Wolverine) மாறியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ‘டெட்பூல்’ படத்தின் முந்தைய இரு பாகங்களின் வெற்றியும், வால்வரின் கதாபாத்திரத்தை டெட்பூல் கதையுடன் இணைத்த முயற்சியே மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. இந்த இரண்டு சூப்பர் ஹீரோக்கள் கூட்டணி ரசிகர்களை கொண்டாட வைத்ததா? மார்வெல் நிறுவனத்துக்கு புத்துயிர் அளித்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தன் வாழ்வின் முக்கிய நோக்கத்தை அடையும் முயற்சியில் இருக்கும் டெட்பூல், அவெஞ்சர்ஸ் குழுவில் சேரவும் முயற்சி எடுக்கிறார். ஆனால் அவரது உலகத்தில் ஆதார சக்தியான வால்வரின் இறந்து விட்டதால் அவரது உலகமும் மெல்ல மெல்ல அழிகிறது. இவற்றி இருந்து காப்பாற்ற டெட்பூலை தங்களுடன் சேர்த்துக் கொள்ள விரும்புகிறது காலத்தை கட்டுப்படுத்தும் டைம் வேரியன்ஸ் அதாரிட்டி (டிவிஏ) அமைப்பு. அதில் துளியும் விருப்பமில்லாத டெட்பூல் வெவ்வேறு உலகங்களுக்கு சென்று அங்கு வாழும் வால்வரினை தேடி கண்டுபிடித்து அழைத்து வருகிறார். இதனால் கோபமடையும் பாரடாக்ஸ் அவர்களை வாய்ட் எனப்படும் உலகுக்குள் அனுப்பி விடுகிறார். அது ஒரு குப்பை கிடங்கு போன்ற உலகம். அதனை கஸாண்ட்ரா என்ற பெண் ஆண்டு வருகிறாள். அவரிடம் இருந்து இந்த இருவரும் எப்படி தப்பினார்கள்? டெட்பூல் தன்னுடைய உலகத்தை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
டெட்பூல் கதாபாத்திரத்தில் ர்யான் ரெனால்ட்ஸ் முதல் காட்சியில் ஆரம்பித்து போஸ்ட் கிரெடிட் காட்சி வரை ஒரே ரகளை தான். அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் குபீர் சிரிப்பை வரவழைக்கும் ரகம். டெட் பூல் படத்தில் நாம் பார்த்த அதே நக்கல் நையாண்டி இந்த படத்திலும் தொடர்கிறது. படம் முழுக்க அவர் பேசும் “18+” காமெடிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன. மார்வெல், ஃபாக்ஸ், சென்சார், ஹோண்டா, கியா, மார்வெல் கதாபாத்திரங்கள் என நான் ஸ்டாப்பாக அவர் அடிக்கும் கவுண்டர்கள் எல்லாமே தெறிக்க விடுகிறது. கலாய் மன்னன் டெட் பூல் என பட்டமே கொடுக்கலாம், அந்த ரகம் ஒவ்வொன்றும்.
லோகன் படத்தில் இறந்து போன ‘வால்வரின்’ இனிமேள் திரையில் பார்க்கவே முடியாதே என ரசிகர்கள் ஏங்கிய ஏக்கத்துக்கு விடை கொடுத்திருக்கிறது மார்வெல். ஹ்யூ ஜாக்மேன் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் நெகிழ்ச்சியில் இருப்பதை உணர முடிகிறது. டெட் பூல் காமெடியில் அதகளம் செய்யும் அதே வேளையில் வால்வரின் ஸ்டைல் மற்றும் மாஸ் காட்சிகள் மூல ஸ்கோர் செய்கிறார்.
மார்வெல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த பலவிதமான சர்ப்ரைஸை அள்ளி வீசியிருக்கிறது. குறிப்பாக, டெட் பூல் ஒவ்வொரு யுனிவர்ஸாக சென்று வால்வரினை தேடும் காட்சி சரவெடி ரகம். படம் முழுக்க நாம் எதிர்பாராத பல ஆச்சர்யமான கேமியோக்கள் அணிவகுப்பது மிகப்பெரிய சர்ப்ரைஸ்.
மார்வெல் ரசிகர்ளுக்கு ஃபுல் மீல்ஸ் போட்ட மார்வெல், சாதாரண ரசிகர்களை எந்த வகையில் திருப்திப்படுத்தும் என்று சொல்ல முடியவில்லை. காமிக்ஸ், மார்வெல் கதாபாத்திரங்கள், ஃபாக்ஸ் இணைப்பு போன்றவற்றில் பரிச்சயம் இல்லாத ரசிகர்கள் முழு படத்தையும் நுணுக்கமாக ரசிக்க முடியுமா? என்பது கேள்விக்குறி தான். ஆனால் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் டப்பிங் செய்திருப்பது நம்ம ஊரு லோக்கல் ரசிகர்களையும் கூடுதலாக ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. சாதாரண ரசிகர்களுக்கு ஜாலியான ஒரு படமாகவும், மார்வெல் ரசிகர்களுக்கு ‘ஃபுல் மீல்ஸ்’ அனுபவமாகவும் இப்படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இது முழுக்க 18 வயதிற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கானது, வசனங்கள் முழுக்க அப்படிப்பட்டவை தான். குழந்தைகளை தப்பித் தவறியும் கூட்டி சென்று விட வேண்டாம் என்பது தான் மார்வெல் நிறுவனமே விடுக்கும் எச்சரிக்கை.