Era Entertainment சார்பில் இயக்குநர் இரா சரவணன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் நந்தன். சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். செப்டம்பர் 20-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் நிலா சுதாகர் பேசும்போது, “எத்தனையோ இயக்குநர்கள் இங்கு வசூலை முன்வைத்து படம் எடுக்கிறார்கள், ஆனால் அண்ணன் சரவணன் அவர்கள், சமூகம் சார்ந்து படத்தை எடுத்திருக்கிறார். சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் இயக்குநர்களில் ஒருவராக அண்ணன் சரவணன் இருக்கிறார். தன் மண்ணைப் பற்றிய வேதனையை பதிவு செய்யும் விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் மக்களுக்காக சிந்திக்கும் சசிகுமார் அவர்கள், மிக அருமையாக இப்படத்தில் நடித்திருக்கிறார். எப்படி இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. அதே போல் இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவர்களுடன் இப்படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்” என்றார்.
Think Music சந்தோஷ் பேசும்போது, “இந்த மேடை ரொம்ப ஸ்பெஷல். இரா. சரவணன் மிக நெருக்கமான நண்பர். நான், வினோத், சரவணன் எல்லோரும் நண்பர்கள். ஒரு நாள் நண்பர் வினோத், சரவணன் ஒரு படம் எடுத்திருக்கிறார், நீங்கள் பாருங்கள் என்று என்னை அழைத்தார். அப்போது மியூசிக் எல்லாம் பிக்ஸ் செய்யாமல் இருந்தது, எந்த எஃபெக்ட்டும் இல்லாமல், டப்பிங் கூட செய்யாமல், அந்த படத்தை பார்த்தேன். மிக அதிர்ச்சியாக இருந்தது. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் இப்படி எல்லாம் ஊர் பக்கம் நடக்கிறதா? என்று கேட்டேன். ஆம் ஊர் பக்கம் எல்லாம் இது மிக சாதாரணம் என்றார்கள். படத்திற்கு இசை பற்றி பேச்சு வந்தது, எனக்கு ஜிப்ரான் மிகச் சரியாக இருப்பார் எனத் தோன்றியது. சரவணனும் அவர் கண்டிப்பாக சரியாக இருப்பார் என்றார். ஜிப்ரான் படத்தின் உணர்வுகளை.. காட்சிகளை.. இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்” என்றார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசும்போது, “இயக்குனர் சரவணன் தயாரிப்பாளராகவும் எவ்வளவு கஷ்டத்திற்கு இடையில், இந்த படத்தை தொடங்கினார் என்பது எனக்கு தெரியும். இங்கிருக்கும் அனைவரின் உதவியாலும், ஒத்துழைப்பாலும் தான் அவர் இப்படத்தை முழுதாக முடித்தார். இந்த கதையை சசி சார் சொல்லி, சரவணன் என்னிடம் வந்து சொன்னார். கதை சொல்லி முடித்தவுடன், ‘கோப்புலிங்கம்’ கேரக்டரை நீங்கள் தான் செய்கிறீர்கள் என்றார், நான் தயங்கினேன். முதன் முதலில் சமுத்திரகனி தான் என்னை நடிக்க கேட்டார். ஆனால் நான் நடிக்கவில்லை என்று மறுத்து விட்டேன். ஆனால் வெற்றிமாறனின் படத்தில் நடித்த பிறகு, அனைவரும் என்னை நடிகனாக நம்பி விட்டார்கள். நான் நல்ல நடிகன் என்ற நம்பிக்கை இல்லை. இயக்குனர் சரவணன் ஒரு பத்திரிக்கையாளராகவும் இருப்பது, அவருக்கு சமூக பொறுப்புடன் கூடிய அக்கறையெல்லாம், படத்தில் உண்மையாக வந்திருக்கிறது. அவரே தயாரிப்பாளர் என்பதால், எந்த சமரசம் இல்லாமல், இந்த திரைப்படத்தை மிக அருமையாக எடுத்திருக்கிறார். ’16 வயதினிலே’ படத்திற்கு பிறகு, அப்படி ஒரு உழைப்பை சசிகுமார் இந்த திரைப்படத்திற்காக தந்திருக்கிறார்” என்றார்.
Trident Arts ரவீந்திரன் பேசும்போது, “இந்த படத்தை பற்றி எனக்கு முதலில் எதுவுமே தெரியாது. சசி சார் கூப்பிட்டு, சார் ஒரு படம் செய்திருக்கிறேன், வந்து பாருங்கள் என்றார். படம் ஆரம்பிக்கும் போது டைட்டில் கூட அப்போது ரெடியாகவில்லை, இது கமர்சியல் படம் இல்லை, வித்தியாசமான படம் பாருங்கள் என்றார். படம் பார்த்து அதிர்ந்து விட்டேன். தமிழ் சினிமாவுக்கு என, சில மரபுகள் இருக்கும், படம் ஆரம்பிக்கும் போது, கோயில், பசு மாடு, என காட்சி வைப்பார்கள், ஆனால் இந்த படத்தில் காலணியை குளோசப்பில் காட்சிபடுத்தி இருந்தார்கள். படம் முடிக்கும் போது எனக்கு அத்தனை பிரமிப்பாக இருந்தது, எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. உடனடியாக இந்த படத்தை நாம் தான் வெளியிடுகிறோம் என்று சொல்லி, ஒப்பந்தம் செய்து விட்டேன். ஒரு வாழ்வியலை சினிமாவாக கொண்டுவர, மிகவும் மெனக்கெட்டு, இப்படத்தை செய்துள்ளார்கள். படத்தில் யாருமே நடிகர்களாக இல்லை, ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கிறார்கள். சசிகுமார் அப்படியே உருக்கி விட்டார். இத்தனை வருட சினிமா அனுபவத்தில் ஒரு திரைப்படத்தை பார்த்து, பிரமிப்பது புதிதாக இருந்தது” என்றார்.
இயக்குநர் ஹெச். வினோத் பேசும்போது, “நண்பர் இரா. சரவணன் இப்படத்தை பார்க்க சொல்லி, கடந்த சில மாதங்களாக என்னை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நான் தவிர்த்துக் கொண்டே இருந்தேன், அவரது முந்தைய படம் “உடன்பிறப்பே” மிகவும் மிகவும் எமோஷனலான படம், அதனால் அவர் படமே வேண்டாம் என, தவிர்த்து வந்தேன், ஆனால் ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் இந்த திரைப்படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக் கொண்டது. நான் கிராமத்திலேயே வளர்ந்து இருந்தாலும், படம் எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு மனிதனை இன்னும் கொஞ்சமாவது நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் சினிமா தான் நல்ல சினிமா என்பேன், அந்த வகையில் இந்த திரைப்படம் மனிதனின் மனதை மாற்றும் சினிமாவாக இருக்கிறது. சசிகுமார் பொருட்காட்சியில் வைக்கும் அளவு, சிறந்த மனிதர் என்பதாலோ, சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்திருக்கிறார் என்பதாலோ, இதை சொல்லவில்லை, உண்மையிலேயே இது சிறந்த திரைப்படம்” என்றார்.