கிராமத்து படங்கள் என்றாலே இன்றைய தலைமுறை ஹீரோக்களில் முதலில் நம் ஞாபகத்துக்கு வருபவர் விமல். அவர் நடிக்கும் படங்கள் காமெடியாகவும், ஒரு சில படங்கள் நல்ல கருத்துக்களையும் பேசும் படமாக வரும். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் படம் தான் “படவா”. தற்போது நாயகனாக உருவெடுத்துள்ள சூரி காமெடியனாக நடித்த கடைசி ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. அதனாலேயே கூடுதல் சிறப்பும் உண்டு இப்படத்துக்கு. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் விமலும், அவரின் நண்பர் சூரியும் வேலைக்கு போனால் வியர்க்குமே, கஷ்டமா இருக்குமே, வேலைக்கு எல்லாம் போவாங்களா? என்ற வியாக்கியானம் பேசிக் கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருகிறார்கள். அத்துடன் அந்த ஊர் மக்களுக்கும் அவ்வளவு ஏன் விமல் சொந்த அக்கா தேவதர்ஷினி குடும்பத்துக்கே பெரும் இம்சையாக இருக்கிறார். சுடுகாட்டுக் கூரை உட்பட ஊரில் இருக்கும் பொது சொத்துக்களை திருடி விற்று குடித்து கும்மாளம் அடிக்கிறார்கள். இதனால் ஊர்மக்கள் எல்லாம் சேர்ந்து பணம் வசூலித்து விமலை மலேசியா அனுப்பி வைக்கிறார்கள். அங்கு சென்றாலாவது திருந்து நல்ல பொறுப்பான மனிதனாக வருவார் என்று. அங்கே விமலுக்கு வேலை போக, மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார். அங்கு வந்த உடன் விமலுக்கு மாலை மரியாதையுடன் வரவேற்று, அந்த ஊரின் ஊர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கிறார்கள். விமலுக்கு கிடைத்த அந்த மரியாதைக்கு காரணம் என்ன? மலேசியாவில் இருந்து திரும்பிய விமல் திருந்தி பொறுப்பான மனிதராக மாறினாரா? என்பதே மீதிக்கதை.
களவாணியில் இருந்தே பெரும்பாலான விமல் படங்களின் வழக்கமான கதாபாத்திரமான வெட்டியாக ஊர் சுற்றுவது, நாயகியை கண்டதும் காதல் கொள்வது என அதே கதாபாத்திரம் தான். ஆனாலும் ரசிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் கதையின் மையப் பிரச்சினையும், அதன் பின் விமலின் மாற்றமும் அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது.
சூரி ஹீரோவின் நண்பர். அவருடன் சேர்ந்து குடித்து கும்மாளமடிக்கும் காட்சிகள் எல்லாமே செம ரகளை. கடந்த சில ஆண்டுகளாகவே சூரியை காமெடியனாக பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை தீர்த்திருக்கிறது இந்த படம். நாயகியாக வரும் ஷ்ரிதா ராவ் அழகு, பாடல்களில் டான்ஸ், டூயட் என ரசிக்க வைக்கிறார். கதையிலும் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் வேலையையும் செய்து விட்டு போகிறார்.
கருடா ராமசந்திர ராஜு வில்லனாக மிரட்டியிருக்கிறார். விமலின் அக்காவாக தேவதர்ஷினி படம் முழுக்க காமெடில் ரகளை செய்திருக்கிறார். நமோ நாராயணன், பூ ராம், விஜய் டிவி ராமர், வினோதினி என மற்ற நடிகர்களும் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ராமலிங்கம் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் மிக இயல்பாக, அதன் வறட்சியையும் பதிவு செய்திருக்கிறது. ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சமீப காலங்களில் கேட்கும் இரைச்சல்களுக்கு நடுவே இதமான மெலடி, தாளம் போடும் டான்ஸ் பாடல்கள் என நன்றாகவே இருக்கிறது.
இயக்குனர் கே.வி.நந்தா வழக்கமான ஒரு ட்ரீட்மெண்டில் கதையை நகர்த்திக் கொண்டு போயிருந்தாலும் ரசிக்கும்படி தந்திருக்கிறார். முதல் பாதி கொஞ்சம் நீளம் அதிகம் இருப்பது போன்ற உணர்வு, அதை மட்டும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். இரண்டாம் பாதியில் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை சொல்லிய விதம் பாராட்டுக்குரியது. மொத்தத்தில் எந்த ஒரு முகம் சுளிப்பும் இல்லாத படமாக, குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கும் ஒரு படம் தான் இந்த “படவா”.