மெட்ரோ என்ற ஒரு மிக முக்கியமான படத்தை, உண்மைக்கு மிக நெருக்கமாக பதிவு செய்திருந்தார் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன். தற்போது அந்த படத்தின் பார்ட் 2 என்பது போல அவரின் கதை, திரைக்கதையில் உருவாகியுள்ள படம் தான் “ராபர்”. அவரே தயாரித்தும் இருக்கிறார். பத்திரிக்கையாளர் கவிதா உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார். மெட்ரோ படத்தை போலவே இந்த படமும் சிறப்பான படமாக இருந்ததா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மைய கதாபாத்திரமாக வரும் சத்யா, தனது பகட்டான வாழ்க்கைக்காக முகத்தை மறைத்துக் கொண்டு வழிப்பறியில் ஈடுபடுகிறார். பல பெண்களை குறி வைத்து, கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் நகை பறிப்பில் ஈட்டுபடுகிறார். அந்த பணத்தை சுகபோக வாழ்க்கைக்காக, ஒரு பெண்ணுக்கு செலவு செய்தும் வருகிறார். இப்படிப்பட்ட நகை பறிப்பு சம்பவம் ஒன்றில் ஒரு பெண் உயிரையும் விடுகிறார். மகளை இழந்து வாடும் தந்தை என்ன செய்கிறார்? வழிப்பறியில் ஈடுபட்ட சத்யா போலீஸில் சிக்கினாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சத்யா. மெட்ரோ படத்தில் நடித்த அதே போன்றதொரு கதாபாத்திரம். புத்திசாலித்தனமாக வழிப்பறி செய்வது, துணிச்சலாக அதை கையாள்வது என தன் கதாபாத்திரத்தை சரிவர செய்திருக்கிறார். ஹீரோ என்று சொல்ல முடியாத ஒரு வில்லன் கதாபாத்திரம். கால் சென்டரில் வேலை செய்து கொண்டே வழிப்பறியில் ஈடுபடுவது, திட்டமிடுவது என ஒரு ரியல் ராபரை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது.
நாயகனின் தாயாக தீபா ஷங்கர். வெள்ளந்தியான, பாசமிக்க தாயாக கொஞ்ச நேரமே வந்தாலும் படத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு செல்கிறார்.
மகளைப் பறிகொடுத்த தந்தையாக ஜெயப் பிரகாஷ், மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். எதுவும் செய்ய முடியாத இயலாமையில் அவரின் உணர்வுகளை மிக கனமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சென்றாயன் வழக்கம் போல தனக்கேயுரிய ஒருவித எகத்தாளமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். டேனியல் ஆன்னி போப் இதுவரை பார்க்காக ஒரு வித்தியாசமான கேரக்டரில் மைக்கேலாக வந்து ஆச்சர்யப்படுத்துகிறார்.
என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு ரியல் சென்னையை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது. ஓ.எம்.ஆர். சுற்றியுள்ள பகுதிகளிலும் கேமரா புகுந்து விளையாடுகிறது. மெட்ரோ படத்திலேயே செயின் பறிப்பு போன்ற விஷயங்கள் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்த படத்திலும் இளம் பெண்ணிடம் செயின் பறிக்கும் காட்சியை மிக அற்புதமாகப் படமாக்கி இருக்கிறார்கள். ஜோகன் சிவனேஷ் இசை படத்துக்கு பலம். பாடல்களும் படத்துக்கு ஏற்றவாறு துணை புரிந்துள்ளது.
படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் சத்யா, எப்படி கொஞ்சம் கொஞ்சமாக வழிப்பறியில் ஈடுபட்டு ராபராக மாறுகிறார் என்ற மாற்றத்தை சிறப்பாக திரைக்கதையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எம்.பாண்டி. என்ன தான் மோசமான எண்ணங்களை கொண்ட நாயகனாக இருந்தாலும் காதலி, ரொமான்ஸ், டூயட் என்ற வழக்கமான அம்சங்களை தவிர்த்து மையக்கதையில் மட்டும் கவனம் செலுத்தியது பாராட்டுக்குரியது. அதே சமயம் மையக் கதாபாத்திரத்தை நாயகனாக சித்தரிக்காமல் ராபராக மட்டுமே காட்டி அதற்கான முடிவை சொன்ன விதமும் நன்றாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக மாறியிருக்கிறது ராபர்.