தமிழ் சினிமாவில் வந்து குவியும், பல வகையான ஹாரர் த்ரில்லர் படங்களுக்கு மத்தியில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. “எமகாதகி” திகில் படமா? அல்லது அம்மன் படமா? என்று இப்போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், “எமகாதகி” மற்ற திகில் படங்களிலிருந்து மாறுபட்ட தனித்துவமான படைப்பாக இருக்கும் என்பதை, உணர்த்துமென தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். “எமகாதகி” கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரூபா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளதாக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம், படப்புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார், அனிமல், அமரன், லியோ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான Sync Cinema, ஒலி வடிவமைப்பை செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச்சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
“எமகாதகி” படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதி மற்றும் டீசர், டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.